திருநங்கைகளுக்கு புதிய சலுகை : ரயில்வே துறை!
உடலளவில் ஆணாகப் பிறந்து மனதளவில் பெண்ணாக உணர்ச்சி மாற்றம் அடைந்தவர்கள் தான் திருநங்கைகள். இப்போது அவர்கள் அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர்.
மேலும், திருநங்கைகளை மூன்றாம் பாலினம் என பல இடங்களிலும், அரசு வேலை வாய்ப்பு விண்ணப்பங்களிலும் குறிப்பிடத் தொடங்கியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, ரயில்வே துறை மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து, டிக்கெட் முன்பதிவு மற்றும் நீக்கம் படிவத்தில் அவர்களின் பாலினத்தைச் சேர்த்தது.
இந்நிலையில், 58 வயதுக்கு மேல் ஆன திருநங்கைகள் ரயில் பயணத்தின் போது, மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை இனி பெற முடியும். அதற்கான இறுதி உத்தரவை விரைவில் ரயில்வேதுறை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. ஆனால், அந்த நடைமுறையை அரசுத்துறைகளில் பல இடங்களில் பின்பற்றாததை தொடர்ந்து,கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜாம்ஷெட் அன்சாரி பொது மனு தாக்கல் செய்தார். அதில், உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்துள்ளது. ஆனால், ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனங்களில் அவர்களுக்கு என டிக்கெட் முன்பதிவு விண்ணப்பத்தில் தனி ஒதுக்கீடு இல்லை. இது, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14, 15, 19 மற்றும் 21 மீறும் செயல்.
எனவே, மாநில அரசு துறைகளிலும், மத்திய அரசு நிறுவனங்களிலும் திருநங்கைகளுக்கு உரிமை அளிக்கும் விதமாக அவர்களை மூன்றாம் பாலினத்தவராக சேர்க்க வேண்டும். மேலும், அவர்கள் பயணம் செய்ய தனிப்பட்ட பெட்டிகள், முன்பதிவு இடங்கள், பாதுகாப்பு ஆகியவற்றை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமைநீதிபதி ஜி.ரோகினி தலைமையிலான அமர்வு முன் வந்தது. அப்போது, நீதிபதிகள் ரயில்வே துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதன்படி, கடந்த நவம்பர் மாதம், ரயில்வேதுறை அமைச்சகம், ரயில்வே, ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, திருநங்கைகளை மூன்றாம் பாலினமாகச் சேர்க்க உத்தரவிட்டது. மேலும், அவர்களுக்கு படுக்கை வசதி, இருக்கை வசதி, உள்ளிட்டவற்றில் அனைத்து வகை சலுகைகளையும் அளிக்க வேண்டும் என்றும் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகையை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இப்போது அதை அமல்படுத்துவதற்காக ரயில்வே துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இது குறித்து ரயில்வே துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், “ திருநங்கைகள் ரயில்வே டிக்கெட் முன்பதிவு படிவத்தில் ஆண், பெண் அல்லது மூன்றாம் பாலினம் என்ற கட்டத்தை அவர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும். அதே வசதி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் செய்யப்பட்டுள்ளது. விரைவில், 58 வயதுக்கு மேல் ஆன திருநங்கைகளும் மூத்த குடிமக்கள் அதிலும் பெண்களுக்கான டிக்கெட் கட்டணச் சலுகையாக 50% பெறலாம்'' என அவர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே விதிகளின் படி, எக்ஸ்பிரஸ் / துரந்தோ / ராஜ்தானி / சதாப்தி உள்ளிட்ட ரயில்களில் அனைத்து வகுப்புகளுக்கும் கட்டண சலுகை வழங்கப்படும். அதன்படி, 60 வயதுக்கு மேல் ஆன ஆண்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 40% சலுகையும், 58 வயதுக்கு மேல் ஆண பெண்களுக்கு 50% கட்டணச் சலுகையும் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.