குடிசை மாற்று வாரிய வீடுகளில் 'பயோமெட்ரிக்' கணக்கெடுப்பு !!
குடிசை மாற்று வாரிய குடியிருப்பு களில் வசிக்கும், ஒதுக்கீட்டாளர்களின் உண்மை நிலவரத்தை அறிய, 'பயோமெட்ரிக்' கணக்கெடுப்பு நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், குடிசை மாற்று வாரியம் சார்பில், இதுவரை, 1.50 லட்சம் குடும்பங்களுக்கு வீடு, மனை ஒதுக்கப்பட்டு உள்ளன. பல நகரங்களில் இக்குடியிருப்புகள் உள்ளன. பெரும்பாலான ஒதுக்கீட்டாளர்கள், வீட்டை உள்வாடகை விடுவதாக, புகார் கூறப்படுகிறது.
இதையடுத்து, புதிய குடியிருப்பு களுக்கான ஒதுக்கீட்டாளர்களை தேர்வு செய்யும்போது, பயோமெட்ரிக் முறையில், அடையாள விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதில், ஒதுக்கீட்டாளரின் ரேஷன் கார்டில், ஒரு முகவரியும், குடிசை மாற்று வாரிய தகவல் தொகுப்பில், வேறு முகவரியும் இருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாரிய குடியிருப்புகளில், ரேஷன் கடைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டு, புதிய கடைகள் அமைக்க, உணவு பொருள் வழங்கல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. கள ஆய்வுக்கு சென்றபோது, பெரும்பாலான ஒதுக்கீட்டாளர்கள், பழைய ரேஷன் அட்டை முகவரியை தொடர்ந்து பயன்படுத்துவது தெரிய வந்தது.
எனவே, உணவு பொருள் வழங்கல் துறையுடன் இணைந்து, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், ஒதுக்கீட்டாளர்கள் குறித்த, புதிய பயோமெட்ரிக் தகவல் தொகுப்பை உருவாக்க உள்ளனர். இதற்காக, அனைத்து ஒதுக்கீட்டாளர்களின் பயோமெட்ரிக் அடையாள குறிப்புகளை பெறுவதற்கான கணக்கெடுப்பு, விரைவில் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.