பள்ளி பாடத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை
ராஜஸ்தான் மாநில பள்ளிப் பாடத் திட்டத்தில், ரொக்கமில்லா பரிவர்த்தனை முறை குறித்த பாடங்களை சேர்க்க, அம்மாநில பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில், ரொக்கமில்லா பரிவர்த்தனை குறித்த பாடத்தை சேர்க்க, ராஜஸ்தான் பள்ளிக் கல்வித் துறையின் தலைவர், பி.எல்.சவுத்ரி அனுமதி அளித்துள்ளார்.
இதுகுறித்து கல்வித் துறை நிபுணர் ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின், 500 - 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை, அதனால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் நன்மைகள் போன்றவை தொகுக்கப்பட்டு, 'தியரி' பாடமாக தயாரிக்கப்படுகிறது. ரொக்கமில்லா பரிவர்த்தனை மற்றும் மொபைல் வாலட் குறித்து மற்றொரு பாடம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, அஜ்மீரில் உள்ள, ஆர்.பி.எஸ்.இ., மாணவர் சேவை மையத்திற்கு, 'ஸ்வைப்' இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலின் நகலை டெபிட் அல்லது கிரடிட் கார்டை பயன்படுத்தி பெறும் வசதியுடன் செயல்முறை அனுபவமும் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்