நிலா வயது?
நாம் வாழும் பூமியின் ஒரே ஒரு துணைக் கோள் நிலா. பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரித் தொலைவு 384, 403 கி.மீ.
ஆகும்.
இந்நிலையில், நிலா குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிலாவின் வயது 451 கோடி ஆண்டுகள் என தெரிய வந்துள்ளது.
நமது சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் பலவும், ஏராளமான துணைக்கோள்களை பெற்றுள்ளன. இதில், புதன், வெள்ளி கோள்கள் தவிர, அனைத்து கோள்களுக்கும் ஒன்று முதல், பல எண்ணிக்கையிலான துணைக்கோள்கள் உள்ளன. இவை அனைத்தும் குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில், தங்களது தாய் கோள்களை சுற்றி வருகின்றன.
அதுபோல், பூமிக்கு துணைக்கோளாக, நிலா உள்ளது. அதன் வயது 435 முதல் 437 கோடி ஆண்டுகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க, கலிஃபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி புவியியலாளர் மெலனி பார்பொனி மற்றும் அவரது குழு, நிலாவின் வயது பற்றி விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இதற்காக, கடந்த 1971ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட அப்போலோ 14 செயற்கைக்கோள் மூலமாக, நிலாவில் இருந்து பூமிக்கு பாறைகள், சிறு கற்கள் மற்றும் மண் மாதிரிகள் எடுத்து வரப்பட்டன. பின்னர் அவற்றை விஞ்ஞானிகள் பரிசோதனை செய்தனர்.
அதில், நமது சூரிய மண்டலம் தோன்றி, அடுத்த 6 கோடி ஆண்டுகளிலேயே, பூமியின் துணைக்கோளாக, நிலா உருவாகிவிட்டது என தெரியவந்துள்ளது. அதன்படி, நிலவின் வயது 451 கோடி ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிலா மீது ஏராளமான விண்கற்கள் மோதல் நிகழ்ந்துள்ளன. இதனால், அதன் பாறைகள், மண் மாதிரிகளில் பலவிதமான பொருட்கள் கலந்துள்ளன. இதுகுறித்து மேலும் விரிவான ஆய்வு செய்ய வேண்டும் என மெலனி பார்பொனி தெரிவித்துள்ளார்.