அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வி ஆண்டில் காலியாக உள்ளன. இவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கு, பள்ளிக்கல்வித் துறை முடிவு
செய்துள்ளது. இதற்காக, நேரடி நியமனத்தில் வந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் என, இரண்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
எனவே, விதிகளின்படி பணிமூப்பு விபரங்களை, வரும், 30க்குள், பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பட்டியல் தயாரிப்பு பணியில் விதிமீறல்கள், பிழைகள் ஏற்படக் கூடாது எனவும், சி.இ.ஓ.,க்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டங்களில் இருந்து வரும் பெயர் விபரங்களை, தலைமை அலுவலக ஆவணங்களுடன் ஒப்பிட்டு, பதவி உயர்வுக்கான தோராய பட்டியல், மூன்று மாதங்களில் இறுதி செய்யப்படும். மார்ச் இறுதியில், இறுதி பட்டியல் தயாராகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.