குடியரசு தின விழா: தமிழகத்துக்கு மூன்றாம் பரிசு!
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு 3வது பரிசு கிடைத்துள்ளது.
கடந்த ஜனவரி 26ஆம் தேதி, குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழா டெல்லி தலைநகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் மூவர்ணக் கொடியை ஏற்றியபிறகு அணிவகுப்பு மரியாதை நடக்கும். முப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள், காவல்துறை மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு விழா நடைபெற்றது. தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும்வகையில் அலங்கார ஊர்திகள் கலந்து கொண்டன.
அதன் அடிப்படையில், தமிழகம் சார்பில் தமிழகத்தின் தலைசிறந்த நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான கரகாட்டத்தை மையாகக் கொண்ட அலங்கார ஊர்தி பங்கேற்றது. தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட அம்மன் சிலைமுன்பு 12 பெண்கள், 6 ஆண் நடனக் கலைஞர்கள் நடனமாடி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.
இதில், முதல் பரிசு அருணாச்சலபிரதேசத்துக்கும், இரண்டாவது பரிசு திரிபுரா மாநிலத்துக்கும் கிடைத்தன. மூன்றாவது பரிசு தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவுக்கு கிடைத்துள்ளது.