வரி விதிப்பில் புதிய மாற்றங்கள்: மத்திய அரசு ஆலோசனை!!!
2017 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மாத ஊதியம் பெறுபவர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் வரி விதிப்பில் மாற்றங்கள் ஏற்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
உயர் மதிப்பு நோட்டுகளின் மதிப்பிழப்பால் மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். நாட்டு மக்களின் நலனை கருதி பொருளாதார ரீதியாக அனைத்து தரப்பு மக்களும் நன்மை அடையும் வகையில் இந்த வரிவிதிப்பு மாற்றங்கள் இருக்கும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரி விகிதத்தில் மாற்றம்
தற்போது நடைமுறையில் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் 10 சதவிகிதமும், 5 முதல் 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவிகிதமும் 10 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 30 சதவிகிதமும் வரி செலுத்தும் நிலையில் குறைந்த பட்ச வரி விதிப்பை மேலும் குறைக்கும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளது. இதனால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள்:
கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமான வரி 25 சதவிகிதமாகவும், டிவிடன்ட் வாரண்டுகள் மீதான வரியை நீக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது. இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டில் ஆர்வம் செலுத்த வாய்ப்பிருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தன.