மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு 'கட் - ஆப்' மதிப்பெண் வெளியீடு
உதவி பொறியாளர் தேர்வுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் விபரத்தை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், உதவி பொறியாளர்களை, எழுத்து, நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்க முடிவு செய்தது. அ
தன்படி, எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில், 375 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய, 2016 ஜன., மாதம் எழுத்துத் தேர்வு நடத்தியது. அண்ணா பல்கலை நடத்திய இந்த தேர்வை, பல ஆயிரம் பேர் எழுதினர்.
தேர்வில் விலக்கு கோரி, சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. பின், நீதிமன்ற அனுமதியில், தேர்வர்களின் மதிப்பெண் மட்டும் வெளியிடப்பட்டது. தற்போது, வழக்கில், மின் வாரியத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதையடுத்து, 'கட் - ஆப்' மதிப்பெண் விபரத்தை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:உதவி பொறியாளர் தேர்வுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண்கள்படி, தகுதியானவர்களுக்கு, நேர்காணல் தொடர்பான தகவல், விரைவில் தெரிவிக்கப்படும். அரசு விதிப்படி, நேர்காணல் நடத்தி, எழுத்து மற்றும் நேர்முக தேர்வில், அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் : உதவி பொறியாளர் நேர்காணலை, மின் வாரியத்தில் பணிபுரியும், தலைமை, மேற்பார்வை பொறியாளர்கள் நடத்த உள்ளனர். அவர்களால், அரசியல் குறுக்கீடுகளை எதிர்கொள்ள முடியாது. இதனால், தேர்வில் முறைகேடு நடக்கும். எனவே, முன்னாள் மின் வாரிய தலைவர்கள் மற்றும் முன்னாள் அரசு செயலர்கள் மூலம் நேர்காணல் நடத்த வேண்டும். நேர்காணலை, வீடியோ பதிவு செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.