வீட்டு மனை பத்திரப்பதிவு:தொடரும் தடை!!!
அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015இல் 43 சதவிகித அளவுக்கு தமிழ்நாடு நகரமயமாக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இங்கு நடைபெறும் அதிவேக ரியல் எஸ்டேட் வியாபாரமும்
விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறியதும்தான் காரணம். இதனால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், விவசாய விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி விளைநிலங்கள் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றப்படுகின்றன.
இந்த வழக்கு விசாரணை, கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தலைமை நீதிபதி கவுல் அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. விளைநிலங்களை வீட்டு மனைகளாக லே-அவுட் போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது, அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப் பதிவுத் துறையினர் எந்தவிதக் காரணம்கொண்டும் பதிவு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி அகில இந்திய மனை மேம்பாட்டாளர்கள், ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை பிப்ரவரி 27ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.