'மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி பாதுகாப்பானது'
'தமிழகம் முழுவதும், பிப்., முதல் வாரத்தில், மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் துவங்கும். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது; வதந்திகளை நம்ப வேண்டாம்' என, தமிழக அரசு தெரிவித்து
ள்ளது.
தமிழகம் முழுவதும், பிப்., முதல் வாரத்தில், 'மீசில்ஸ் ரூபெல்லா' தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த தடுப்பூசி தொடர்பாக, விஷமிகள் சிலர், 'வாட்ஸ் ஆப்' மூலம், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கம்: ஐ.நா.,வின் உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, தமிழக அரசின் மீது வைத்த நம்பிக்கையால், 'மீசில்ஸ் ரூபெல்லா' தடுப்பூசி திட்டத்தில், தமிழகம் முதற்கட்டத்திலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒன்பது மாதம் முதல், 15 வயது குழந்தைகள் வரை, அனைவருக்கும், மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி போடும் திட்டம், பிப்., முதல் வாரம் துவங்கி, ஒரு மாதம் நடக்கிறது. வழக்கமாக, 10 முதல் 12 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு, முதல் தவணையும், 16 முதல், 24 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு, இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்படுகிறது. ஏற்கனவே தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், இத்திட்டத்தில் தடுப்பூசி போடப்படும். எந்த குழந்தையும் விடுபடாத வகையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இத்திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும். மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் வராமல் தடுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசியால், குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது குழந்தை களுக்கு கொடிய நோய்களை வராமல் தடுக்கும்,'' என்றார்.
உயிருக்கே ஆபத்தாகும் :
மீசில்ஸ் என்பது தட்டம்மை நோய். இது காய்ச்சல், உடல் வலியை ஏற்படுத்தி, உடல் முழுவதும் தடிமனை உருவாக்கும். நோய் வீரியமானால், நிமோனியா ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகும்
ரூபெல்லா என்பது கர்ப்பிணிகளை தாக்கினால், பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் உறுப்பில் ஊனம் ஏற்படும்; கருக்கலைப்புக்கு காரணமாகும். உலக சுகாதார நிறுவன ஆய்வுப்படி, உலகில் ஆண்டு தோறும், ஒரு லட்சம் குழந்தைகள், ரூபெல்லா பாதிப்புடன் பிறக்கின்றன. இதைத் தடுக்க, தடுப்பூசியே ஒரே வழி.