கட்டணம்நேரடியாக செலுத்த 'மொபைல் ஆப்'
அரசு கேபிள், 'டிவி' சந்தாதாரர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, 'மொபைல் ஆப்' மூலம் நேரடியாக செலுத்தும் திட்டம், விரைவில் அறிமுகம் ஆகிறது.
இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது:
தமிழகத்தில், 2011 முதல், அரசு கேபிள், 'டிவி' புனரமைக்கப்பட்டு, சென்னையை தவிர, மற்ற இடங்களில் அறிமுகமானது. பின், சென்னையிலும் சேவை துவங்கியது.
பொது மக்களுக்கு மாத சந்தா, 70 ரூபாயாக நிர்ணயித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்; 2011 நவ., 11ல், அது அமல்படுத்தப்பட்டது. அதில், 20 ரூபாய் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு தரப்படுகிறது; அதற்காக ரசீது வழங்கப்படுகிறது.
எனினும், சில ஆப்பரேட்டர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக வசூலிப்பதாக, பொது மக்கள் புகார் கூறுகின்றனர். அதனால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டும், சந்தாதாரர் செலுத்துவதற்காக, ஒரு பிரத்யேக, 'மொபைல் ஆப்' உருவாக்கப்பட்டு வருகிறது. அதை, 'ஆண்ட்ராய்டு போன்' மூலம் பதிவிறக்கம் செய்து, மாத கட்டணத்தை, அரசுக்கு நேரடியாக செலுத்தலாம்.
இதற்காக, சந்தாதாரர்களின் விபரம் தொகுக்கும் பணி நடந்து வருகிறது. ரிசர்வ் வங்கி விதிகளின்படி, ஆப்பரேட்டர்களுக்கு, வங்கி மூலம் கமிஷன் அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
லாபத்தில் அரசு கேபிள்!
மற்ற நிறுவனங்கள், மாத வாடகையாக, 150 ரூபாய் வரை வசூலிக்கும் நிலையில், குறைந்த கட்டணம் வசூலிக்கும் அரசு கேபிள், 'டிவி'யும் லாபம் பார்க்க துவங்கியுள்ளது. 2011 - 12ல், 23 லட்சம் ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய இந்நிறுவனம், அடுத்தடுத்த ஆண்டுகளில், 5.2 கோடி; 12.02 கோடி; 18.46 கோடி; 34.95 கோடி ரூபாய் என, தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.