உதவிப் பேராசிரியர் நேரடி நியமன எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு!
அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்துக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.
இதில் தகுதி பெற்றவர்களுக்கு வருகிற 19,20 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.
அரசுப் பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 192 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமனம் செய்வதற்கான அறிவிப்பை கடந்த 2014 ஆம் ஆண்டு டிஆர்பி வெளியிட்டது. அந்த அறிவிப்பில், வயது உச்சவரம்பில் எழுந்த சிக்கல் காரணமாக, இந்தப் பணியாளர் தேர்வுப் பணி நிறுத்திவைக்கப்பட்டது.
அதன் பிறகு வயது உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டது. விண்ணப்பதாரருக்கான அதிகபட்ச வயது 57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டு, கடந்த 22-10-2016 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வுக்கான முடிவு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய அனைவருக்குமான முடிவுகள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதனுடன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு இடத்துக்கு இருவர் என்ற அடிப்படையில் தகுதிவாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்கான அழைப்புக் கடிதத்தை டிஆர்பி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அழைப்புக் கடிதம் தனியார் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.