டெட் தேர்வு குறித்த சில கேள்விகளும், அவற்றிற்கான விடைகளும்.

டெட் தேர்வு குறித்த சில கேள்விகளும், அவற்றிற்கான விடைகளும்.

1) டெட் பணி நியமனம் உடனடியாக வர வாய்ப்பு உள்ளதா?

      ஆம். ஆனால் அதில் பல்வேறு நிர்வாக சிக்கல் உள்ளது. முதற்கட்டமாக பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வித்துறை, சமூக நலத்துறை, ADW, கள்ளர் பள்ளிகள் உட்பட அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, அவை மாவட்ட அளவிலும், பின்னர் மாநில அளவிலும் தொகுக்கப்பட்ட பிறகு, பல்வேறு இடஒதுக்கீடு அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தேவைப்படும் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வாணையம் மூலமாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு, பிறகு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும். பொதுவாக கல்வி ஆண்டின் இறுதி கட்டத்தில் (ஏப்ரல் மாதங்களில்) பணி நியமனம் நடைபெறுவதில்லை. 

       மாவட்ட அளவில் காலிப்பணியிடங்கள் பட்டியல் தொகுத்து மாநில அளவில் வழங்க பிப்ரவரி மாத முதல் வாரமே இறுதி நாளாக வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஏறத்தாழ ஒரு வாரத்திற்குள் மாநில அளவிலான காலிப்பணியிடங்களின் பட்டியல் தொகுக்கப்பட்ட பிறகு உடனடியாக ஆசிரியர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்து இதர அனைத்து பணிகளும் முடிவடைந்து பணி நியமன ஆணை வழங்கி பணியில் சேர தோராயமாக மார்ச் மாதம் ஆகலாம். ஆனால் தற்போது உள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து பணி நியமனம் நடைபெற முதல்வர் அலுவலகத்திலிருந்து உரிய ஆணை உடனடியாக கிடைப்பதில் தாமதம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களின் ஏக்கம் ஆகும்.

2) உச்ச நீதிமன்ற தீர்ப்பு, வெளியானவுடன் மாண்புமிகு கல்வி அமைச்சர் டெட் தேர்வு உடனடியாக நடைபெறும் என கூறினார். ஆனால் தற்போது டெட் தேர்வு தாமதமாகும் என கூறியுள்ளாரே அதற்கான காரணம் என்ன?
      கடந்த சில ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படாமல் இருந்ததால் உடனடியாக டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே அரசின் விருப்பமாகும். ஆனால் புதிதாக தேர்வு வைத்தால் அத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தப்பட்டு, உத்தேச கீ ஆன்சர்கள் வெளியிடப்பட்டு, இறுதி முடிவு வெளியிட மேலும் பல மாதமாகும். இதற்கிடையில் தேர்வு குறித்தும், கீ ஆன்சர்கள் குறித்தும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் மேலும் தாமதமாகும். எனவே தான் உடனடியாக பணி நியமனம் நடத்தி முடிக்கவும், அதன் பிறகே தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடவும் அரசு விரும்புகிறது.

3) புதிய டெட் தேர்வு உடனடியாக அறிவிக்கப்பட்டால், என்ன நிகழும்?
     நிச்சயமாக பணி நியமனம் முடிவடைவதற்கு முன்னதாக புதிய தேர்வு அறிவிக்கப்பட்டால், அரசு பணிக்காக காத்திருப்பவர்கள் பணி நியமனத்தை நிறுத்தி வைக்குமாறும், தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பிறகு புதிய டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் Consider செய்த பிறகே பணி நியமனம் நடைபெற வேண்டும் என Stay Order  வாங்குவார்கள். இதனால் மேலே குறிப்பிட்டது போல் பணி நியமனம் நடைபெற பல மாதங்களாகும். அதனால் தற்போதைக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்படும் வரை புதிய டெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருப்பதே பலனளிக்கும். 

4) உடனடியாக டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என வழக்கு தொடரலாமா?
     கடந்த ஆண்டின் துவக்கத்திலேயே முதுகலை ஆசிரியர் சங்கம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிப்பதால் உடனடியாக PGTRB தேர்வு வைத்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பும் தங்களுக்கு சாதகமாக பெற்றது நினைவிருக்கலாம். ஆனாலும் இன்று வரை புதிய PGTRB நடத்தப்படவில்லை என்பதே நிதர்சனம். காரணம் நீதிமன்ற தீர்ப்புகள் - Court Direction ஆணை வழங்குமே தவிர இறுதி கட்ட தேதி குறிப்பிட்டு, அதற்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என பொதுவாக கெடு விதிப்பதில்லை. எனவே தான் அரசை இது சார்பாக கட்டாயப்படுத்த முடியாது. 

5)  புதிய டெட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட பிறகே தற்போது நடைபெற உள்ள பணி நியமனங்கள் நடைபெற வேண்டும் என வழக்கு தொடரலாமா?
    அவ்வாறு வழக்கு தொடர்ந்து Stay Order பெறுவதால் பணி நியமனம் மீண்டும் தாமதமாகுமே தவிர, இறுதி வெற்றி கிடைப்பது சிரமமே. காரணம் கடந்த சில ஆண்டுகளாக பணி நியமனம் நடைபெறாததால் மாணவர் நலன் பாதிக்கப்படுகிறது என ஒரே வாதத்தை முன்வைத்து அரசு மிக சுலமாக Stay Order - ஐ இரத்து செய்து விடும். 

6)   புதிதாக நடைபெற உள்ள பணிநியமனத்தின் போது தற்போது உள்ள வெயிட்டேஜில் உள்ள குறைகள் களையப்பட்டிருக்குமா?

 தற்போது உள்ள வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் நடந்தால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கூட மீண்டும் வழக்கு தொடர சாத்தியம் குறைவு. ஆனால் மிக சரியான ஒரு வெயிட்டேஜ் முறை கண்டறியப்பட்டு அதனடிப்படையில் பணி நியமனம் நடப்பதாக வைத்துக்கொண்டால், அப்புதிய, சரியான வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஒரு சிலரேனும் நிச்சயம் மீண்டும் வழக்கு தொடருவர். இதனால் பணி நியமனம் மீண்டும் தாமதமாகும். அதனால் தற்போது நடைபெற இருக்கும் பணி நியமனத்தில் அரசின் முந்தைய நிலையே தொடர வாய்ப்பு உள்ளது. தற்போது இல்லாவிட்டாலும் அடுத்த டெட் தேர்வு மற்றும் பணி நியமனத்திற்குள்ளாவது இப்பழைய வெயிட்டேஜ் முறையில் உள்ள குறைகளை களைவது மிகவும் அவசியமாகும்.  

7) தற்போது 8 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது சாத்தியமா?        
         பள்ளக்கல்வித்துறை, தொடக்கக்கல்வித்துறை, மற்றும் இதர பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டால் ஓரளவு சாத்தியம் தான். இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்க அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தினாலும் பொதுமக்களின் தனியார் பள்ளி மோகத்தின் காரணமாக பல பள்ளிகளிலும் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், மாவட்டந்தோறும் உபரி பணியிடங்கள் என கணக்கிடப்பட்டு பந்தாடப்பட்டு வருவதால், புதிய பணியிடங்கள் 8 ஆயிரம் நிரப்பப்படும் எனும் அறிவிப்பு ஆசிரியர்-மாணவர் விகிதம் குறைப்பதன் அச்சாரமாக கருதலாம். ஆனால் கணித பாடம் உட்பட முக்கிய பாடங்களுக்கு முன்னதாகவே தமிழகம் முழுவதும் உபரி ஆசிரியர்கள் அதிக அளவில் உள்ளதால், அப்பாடங்களை பயின்று பணிக்காக காத்திருப்பவர்களுக்கு இதர பாடங்களை காட்டிலும் அதிகபட்ச பணியிடங்கள் ஒதுக்கபடக் கூடிய வாய்ப்பு குறைவு.

8) அடுத்த டெட் தேர்வு எப்போது நடத்தப்படலாம்?
      டெட் தேர்வு நடத்தப்பட தேர்வறை கண்காணிப்பாளர்களாக ஆசிரியர்களும், இதர பணிகளுக்காக கல்வித்துறையின் அலுவலக பணியாளர்களும், தேர்வர்களுக்கு சுலபமான தேர்வு மையங்களும் தேவை. ஆனால் வர இருக்கக்கூடிய பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மாதங்களாக இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் முழு கவனமும் பொதுத் தேர்வு குறித்தே இருக்கும். அக்கால கட்டங்களில் தேர்வு மையங்கள் கிடைப்பதும் கடினம். எனவே மார்ச் மாத இறுதிக்குள் பணி நியமனங்கள் குறித்த அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டால், அடுத்த ஓரிரு வாரங்களிலேயே புதிய டெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு மே மாதத்தில் தேர்வு நடத்தப்படக்கூடிய வாய்ப்பு மிக, மிக அதிகம்.

9) டெட் தேர்வுக்கு எப்போதிருந்து தயாராகலாம்?
                 ஓட்டப்பந்தயம் துவங்கிய பிறகு ஓட முயற்சிப்பவர்களை விட, முன்னதாகவே ஓடுவதற்கு உரிய பயிற்சி பெறுபவர்களே எளிதில் வெற்றியடைய முடியும். அடுத்த டெட் தேர்வு மே 2017 ல் முடிவடைந்து முடிவுகள் டிசம்பர் 2017க்குள் வெளியிடபடும் என வைத்துக்கொண்டால் அடுத்த கட்ட பணி நியமனம் உடனடியாக பிப்ரவரி 2018 அல்லது ஜுன் 2018 ல் நடப்பதாகவே வைத்துக்கொள்வோம். அப்போது காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகபட்சமாக தாள் 1 மற்றும் தாள் 2 என அனைத்தும் சேர்ந்து 2000 பணியிடங்கள் கிடைப்பதே அரிது. எனவே போட்டி மிக கடுமையாக இருக்கும். 

        தோராய இலக்கு உங்களுக்கு சுட்டிக்காட்டி விட்டோம். அதற்கான கடுமையான உழைப்பை வழங்குவது உங்களின் கடமை. 2018ல் பணி நியமனம் பெறக்கூடிய ஒரிரு ஆயிரம் ஆசிரியர்களில் நீங்களும் இருக்க வாழ்த்துக்கள்!

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)