'ஏரோநாட்டிக்ஸ்' பாட திட்டம் வெளியீடு
அறிவியல் கல்லுாரிகளில், முதன்முறையாக, 'ஏரோநாட்டிக்ஸ்' படிப்பு துவங்கப்பட உள்ளது. அதற்கான பாடத்திட்டத்தை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.
ஏரோநாட்டிக்ஸ் என்ற, விமான பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்பு, இதுவரை, இன்ஜி., கல்லுாரிகளிலும், பல்கலைகளிலும் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. அதிலும், குறைந்த இடங்களும், அதிக கட்டணமும் உள்ளதால், பல மாணவர்களால் சேர முடியவில்லை.
ஏரோநாட்டிக்ஸ் துறையில், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இதனால், அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், பி.எஸ்சி., ஏரோநாட்டிக்ஸ் பட்டப்படிப்பை துவங்க, யு.ஜி.சி., உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, இந்த படிப்புக்கான புதிய பாடத்திட்டம், யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பாடத்துக்கு, தரம் வழங்கும், கிரெடிட் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தவும், கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.