வருகிறது வட்டியில்லாக் கடன்


வீட்டுக் கடன் என்ற ஒன்று இல்லையென்றால் நடுத்தர வர்க்க மக்களின் சொந்த வீட்டுக் கனவு மெய்ப்பட வாய்ப்பே இல்லை. ஆனால் சொந்த வீட்டில் வாழ ஆசைப்பட்டுக் கடன் வா
ங்கி, வீடு வாங்கிவிட்டாலும் அல்லது கட்டி விட்டாலும் அந்தக் கடனை அடைக்க மாதா மாதம் அவர்கள் திண்டாட வேண்டியிருக்கும். தங்கள் மாதச் செலவுகளையெல்லாம்

சுருக்கிக்கொண்டு வளைகளுக்குள் எலியைப் போல வாழ வேண்டியிருக்கும்.
இந்தச் சூழலில் எதிர்பாராத மருத்துவச் செலவோ கல்யாணம் போன்ற செலவோ வந்துவிட்டால் அவ்வளவுதான். மீண்டும் கடனைத்தான் நாட வேண்டியிருக்கும். இப்படி வீட்டுக்கு, தனி நபர்த் தேவைக்கு, வாகனம் வாங்குவதற்கு, கல்விக் கட்டணம் அடைப்பதற்கு எனக் கடன் வாங்கிப் போட்டு வட்டிகளைக் கட்டுவதிலேயே முழுச் சம்பாத்தியத்தையும் செலவிட வேண்டிவரும்.
இந்த நடுத்தர மக்கள்தான் ஒவ்வொரு ஆண்டும் வீட்டுக் கடன் வட்டி குறைகிறதா என ரிசர்வ் வங்கி அறிவிப்புக்காகக் காத்திருப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாக வீட்டுக் கடனுக்கான வட்டி தொடர்ந்து குறைந்துவந்தது ஒரு ஆரோக்கியமான விஷயம். ஆனால் கடன் என்னும் தொந்தரவுகளிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை. இந்தச் சூழலில் வட்டியில்லாக் கடன்களைத் தரும் இஸ்லாமிய வங்கிகள் இந்தியாவில் தொடங்க ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. இந்த வங்கிகள் இந்தியாவில் தொடங்கப்படும் பட்சத்தில் வங்கிக் கடனையே நம்பியிருக்கும் நடுத்தர மக்களுக்கு பெரிய வரப் பிரசாதம்தான்.
இஸ்லாமிய ஷரிஅத் சட்டப்படியே இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. இந்த வங்கிகளில் முதலீடு செய்யப்படும் தொகைக்கும் வட்டி கிடையாது. ஆனால் வட்டி தரும் வங்கிகளை விட அதிக அளவில் லாபத்தைத் தன் முதலீட்டாளர்களுக்குத் தரக்கூடியது. வாடிக்கையாளர்கள் வாங்கும் கடன்களுக்கும் வட்டி வசூலிக்கப்பட மாட்டாது. இந்த வங்கிகள் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தநிலையில் பல்வேறு பன்னாட்டு வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டன. ஆனால் அம்மாதிரியான மோசமான சூழலிலும் இந்த இஸ்லாமிய வங்கிகள் சிறப்பாகச் செயல்பட்டன.
முதல் இஸ்லாமிய வங்கி
துபாய் இஸ்லாமிய வங்கிதான் முதன் முதலில் தொடங்கப்பட்ட இஸ்லாமிய வங்கி. 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கிதான் ஐக்கிய அரபு நாடுகளின் மிகப் பெரிய வங்கி. 175 கிளைகளுடன் பாகிஸ்தானிலும் இந்த வங்கி செயல்பட்டுவருகிறது. இன்று இஸ்லாமிய வங்கிகள் பல நாடுகளின் முதலீட்டுடன் 50களுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இது கடந்த பத்தாண்டுகளுக்குள் இஸ்லாமிய வங்கிகள் அடைந்த மாபெரும் வளர்ச்சி.
வட்டி இல்லாமல் எப்படிக் கடன் தருகின்றன?
இஸ்லாமிய வங்கிகளைப் பொறுத்தவரை கட்டப்படும் பணத்துக்கு வாடிக்கையாளர்களுக்கு வட்டி அளிப்பதில்லை என்பதைப் போல் கடனாக அளிக்கப்படும் பணத்துக்கும் வட்டி வசூலிப்பதில்லை. வங்கிகள் செய்யும் முதலீட்டின் மூலம் ஈட்டும் பணம்தான் வங்கிகளின் லாபம். இதில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. கிடைக்கும் லாபத்தை வங்கிகள், முதலீட்டாளர்களுடன் பங்குபோட்டுக்கொள்கின்றன. அதைப் போல நஷ்டத்தையும் முதலீட்டாளர்கள் வங்கிகளுடன் பங்குகொள்ள வேண்டும். அதுபோல் கடன் விண்ணப்பதாரருடன் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் பங்கு என்ற அளவில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்கிறார்.
இந்த லாப அடிப்படையில் இஸ்லாமிய வங்கிகள் கடன் அளிக்கின்றன. மேலும் தொழிலுக்குத் தேவையான கருவிகளையும் வங்கியே வாங்கித் தருகின்றன. அதுபோலவே வீட்டுக் கடனையும் வட்டியில்லாமல் தருகின்றன. அதாவது சிறு அளவில் லாபத்தைப் பங்கு பத்திரமாக அவ்வப்போது வாங்குவதாலும் அல்லது மாத வாடகை முறையில், கடன் தொகையைக் கால வரையறை இல்லாமல் செலுத்துவதாலும் வங்கிகளுக்கு இழப்பு ஏற்படுவதில்லை. வீட்டுக் கடன் தொகையைச் செலுத்த முடியவில்லை என்றால் அதுவரை வாங்கிய பங்குப் பத்திரங்களை உடனடியாக விற்றுவிடலாம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்தப் பரிந்துரை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இஸ்லாமிய வங்கிகள் உலகில் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. இவை இந்தியாவுக்கும் வரும் பட்சத்தில் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.கோபாலகிருஷ்ணன்,
ஒய்வுபெற்ற வங்கி அதிகாரி
இஸ்லாமிய மதக் கோட்பாட்டின் அடிப்படையில் இஸ்லாமிய வங்கிகள் தாங்கள் கொடுக்கும் கடனுக்கு வட்டி வசூலிப்பதில்லை. அதேபோல தங்கள் வங்கியில் பணம் முதலீடுசெய்பவர்களுக்கும் வட்டி கொடுப்பதில்லை. வங்கிகளின் முக்கியமான ஆதாரம் வட்டி. ஆனால் வட்டியே இல்லாமல் ஒரு வங்கி எப்படி இயங்கும், என்பது ஆச்சரியமான விஷயம்தானே.
இந்த இஸ்லாமிய வங்கிகள் தங்கள் முதலீட்டை தொழில்களில் முதலீடுசெய்து அதில் வரும் லாபத்தைத் தனது முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கிறது. மதுபானம், சீட்டாட்டம் போன்ற தொழில்களில் அவை முதலீடுசெய்வதில்லை. இந்த வங்கிகள் அரபு நாடுகள் மட்டுமின்றி லண்டன் முதல் பிலிப்பைன்ஸ் வரை தனது வங்கிச் சேவையை விஸ்தரித்துள்ளன.
இஸ்லாமிய வங்கிகளுக்கான முதல் அனுமதியைக் கேரள அரசு முன்னமே வழங்கியுள்ளது. ஆனால் அந்தச் சமயத்தில் ரிசர்வ் வங்கி அதற்கான அனுமதியைத் தரவில்லை. அதுபோல் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் அவரது சவுதிஅரேபியப் பயணத்தின்போதே இஸ்லாமிய வங்கிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்த கோரிக்கை சவுதி அரபியே தரப்பில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அது சாத்தியமாகவில்லை. இப்போது ரிசர்வ் வங்கியே இஸ்லாமிய வங்கிக்கு அனுமதி தரலாம் எனப் பரிந்துரைத்துள்ளன. அதனால் இஸ்லாமிய வங்கிகள் இந்தியாவில் கூடிய விரைவில் தனது செயல்பாட்டைத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். அவை இந்தியாவில் வீட்டுக் கடன் தரப் போகின்றனவா எனத் தெரியவில்லை. அப்படித் தரும் பட்சத்தில் அதற்கு கண்டிப்பாக வட்டி வசூலிக்காது. பதிலாக வீட்டு வாடகை போல மாதம் மாதம் தவணைத் தொகைபோல் சிறு லாபத்துடன் வசூலிக்க வாய்ப்பிருக்கிறது.
  ஐடியல் சிறில் கிறிஸ்துராஜ், 
தேசியக் கட்டுமானச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்
இந்தியாவைப் பொறுத்தவரை வீடில்லாத நடுத்தரவர்க்கத்தினர் வீடு வாங்கப் பெரும்பாலும் வங்கிக் கடனையே சார்ந்திருக்கிறார்கள். கடன் வாங்கிவிட்டு வட்டிப் பிரச்சினையால் சிரமப்படு கிறார்கள். ரிசர்வ் வங்கி பரிந்துரைசெய்திருக்கும் இந்த இஸ்லாமிய வங்கிகள் இங்கு வந்தால் வட்டி யில்லா வீட்டுக் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியான வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவில் வீட்டுத் தேவையும் நிறைவேறும். பண மதிப்பு நீக்கம், அரசு வழிகாட்டி மதிப்பு உயர்வு, நிலையில்லாமல் உயரும் கட்டுமானப் பொருள்கள் விலையேற்றம் என ஸ்தம்பித்துப் போயுள்ள கட்டுமானத் துறையும் சற்றுப் புத்துணர்ச்சி அடையும்.
இஸ்லாமிய வங்கிகளைப் பொறுத்தவரை கட்டப்படும் பணத்துக்கு வாடிக்கையாளர்களுக்கு வட்டி அளிப்பதில்லை என்பதைப்போல் கடனாக அளிக்கப்படும் பணத்துக்கும் வட்டி வசூலிப்பதில்லை.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank