'பவர்' அடிப்படையில் பத்திர பதிவு விதிமுறையில் வருகிறது மாற்றம்.
'பவர்' எனப்படும், பொது அதிகார ஆவணம் அடிப்படையிலான பத்திரப்பதிவுக்கு, உரிமையாளர் உயிர்வாழ்
சான்றை கட்டாயமாக்க, பதிவுத்துறை திட்டமிட்டுள்ளது. சொத்து பரிவர்த்தனையில், நேரடியாக பங்கேற்க முடியாத உரிமையாளர்கள், முகவர்களை நியமிக்கலாம்.
இதற்காக, முகவர்களுக்கு பொது அதிகார ஆவணம் வாயிலாக அதிகாரம் வழங்கலாம். இத்தகைய ஆவணங்களை போலியாக தயாரித்து, நில மோசடி நடப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, 'பவர்' அடிப்படையில், சொத்து விற்பனையை பதிவு செய்யும் போது, அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான, மருத்துவ சான்றிதழை தாக்கல் செய்வது, 2013 பிப்., 1 முதல், கட்டாயமானது. இதற்கான சுற்றறிக்கையின், எட்டாவது பத்தியில், '2013 பிப்., 1 அன்றோ, அதற்கு
முன்னரோ பதிவு செய்யப்பட்ட, பவர் அடிப்படையிலான பதிவுகளுக்கு, உரிமையாளரின் உயிர்வாழ் சான்று அவசியமில்லை' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்படி, முன்னரே, 'பவர்' வாங்கி வைத்துள்ளதாகவும், அதற்கு, உரிமையாளர் உயிருடன் இருப்பதற்கான சான்று தேவையில்லை எனவும் கூறி, மோசடியாக பத்திரப்பதிவுகள் நடப்பதாக, புகார்கள் எழுந்தன.
இது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவுப்படி, இதற்கான சுற்றறிக்கையை மாற்ற பதிவுத்துறை முடிவு செய்து உள்ளது.
இது குறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது அதிகார ஆவணம் அடிப்படையிலான அனைத்து பதிவுகளுக்கும், உயிர்வாழ் சான்று கட்டாயம் என்ற வகையில் மாற்றம் இருக்கும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.