கிரெடிட் கார்டு கட்டணங்கள்!!!
கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கவனமாக இருப்பது அவசியம். அதே போல கிரெடிட் கார்டு கட்டணங்கள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு வசதியானது, பலவித அனுகூலங்களை கொண்டது; என்றாலும் அதற்கு ஒரு விலை இருக்கிறது. ஆம், கிரெடிட் கார்டு பயன்பாடு பலவித கட்டணங்களை கொண்டிருக்கிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நகர்புற மக்களிடம் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிக
ரித்துள்ள நிலையில், இந்த கட்டணங்களை அறிந்திருப்பது அவசியம்.
ஆரம்ப கட்டணம் :கிரெடிட் கார்டு பயன்படுத்த துவக்க கட்டணம் செலுத்த வேண்டும். வங்கிகள் பொதுவாக அனுமதி கட்டணம் (ஜாயினிங் பீ) மற்றும் ஆண்டு கட்டணத்தை வசூலிக்கின்றன. என்றாலும் சில கார்டு நிறுவனங்கள் இவை இல்லாமல் இலவசமாகவும் வழங்கலாம். அனுமதி கட்டணம், 200 ரூபாயில் இருந்து துவங்குகிறது. இது, 25,000 ரூபாய் வரை செல்லலாம். ஆண்டு கட்டணம், 299 முதல் 800 ரூபாய் வரை இருக்கலாம். சில கார்டு நிறுவனங்கள், முதலாண்டில் சலுகை அளித்து கட்டணங்களை ரத்து செய்யலாம். இரண்டாம் ஆண்டில் கவனம் தேவை.
ரொக்க கட்டணம் :எல்லா கார்டுகளுக்கும் கடன் வரம்பு உண்டு. இந்த கடன் வரம்புக்கு அதிகமாக பயன்படுத்தினால், கூடுதல் தொகையில், 2.5 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், இது உங்களின் கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும். கார்டு மூலம் ரொக்கப்பணம் எடுக்கலாம். ஆனால், கிரெடி கார்டு மூலம் ரொக்க முன்பணம் எடுக்கும் போது அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். பொதுவாக இது ரொக்கமாக எடுக்கும் தொகையில், 2.5 சதவீதமாக இருக்கலாம்.
பரிவர்த்தனை முறை :பில் தொகையை எப்படி செலுத்துகிறீர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். வங்கி கிளை அல்லது ஏ.டி.எம்., மூலம் ரொக்கமாக செலுத்தினால் செயல்முறை கட்டணம் செலுத்த வேண்டும். வெளியூர் காசோலை என்றால் அதற்கும் செயல்முறை கட்டணம் உண்டு. காசோலை தொகை மற்றும் கார்டு நிறுவனத்திற்கு ஏற்ப இது அமையலாம். நெட் பாங்கிங் அல்லது மொபைல் பாங்கிங் மூலம் பணம் செலுத்துவதே சிறந்த வழி. இவைத்தவிர ஒரு சில வர்த்தக நிறுவனங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய தொகையில் ஒரு பகுதியை கூடுதல் கட்டணமாக வசூலிக்கலாம்.