ராணுவ தளபதிகள் பொறுப்பேற்பு !
புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் பிபின் ராவத்தும், விமானப்படை தளபதியாக ஏர் மார்ஷல் பீரேந்திர சிங்கும் பதவிஏற்றுள்ளார்கள்.
ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் தல்பீர் சிங் சுகாக், விமானப்படை தளபதியாக இருந்த ஏர் சீப் மார்ஷல் அரூப் ராகா ஆகியோர் நேற்று ஓய்வு
பெற்றனர். இதையடுத்து அவர்களுக்கு பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதற்கு முன் அவர்கள் டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின் பேட்டியளித்த ஜெனரல் தல்பீர் சிங், ‘‘நாட்டுக்கு வெளியேயும், உள்ளேயும் எந்த சவால்களையும் சந்திக்கும் வகையில் இந்திய ராணுவம் தயாராக உள்ளது. ’’ என்றார். இவர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து ராணுவத்தின் புதிய தளபதியாக ஜெனரல் பிபின் ராவத்தும், விமானப்படை தளபதியாக ஏர் மார்ஷல் பீரேந்தர் சிங் தனோவாவும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஜெனரல் பிபின் ராவத், ராணுவத்தில் கடந்த 1978ம் ஆண்டு டிசம்பர் மாதம் சேர்ந்தார். கூர்க்கா படைப்பிரிவில் இருந்து ராணுவத் தளபதியாக பதவி ஏற்கும் இரண்டாவது தலைவர் பிபின் ராவத். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றிய இவர் காங்கோ நாட்டுக்கு கடந்த 2008ம் ஆண்டு அனுப்பட்ட ஐ.நா அமைதி படையில், இந்திய படைப்பிரிவுக்கு பிபின் ராவத் தலைமை தாங்கினார். இவரது தலைமையின் கீழ், காங்கோ தீவிரவாதிகளை இந்திய அமைதிப்படை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது. தற்போது 13 லட்சம் பேர் உள்ள இந்திய ராணுவத்துக்கு இவர் 27-வது தளபதியாக பொறுப்பேற்றுள்ளார். இவரைவிட சீனியர் அதிகாரிகளாக லெப்டினன்ட் ஜெனரல் பிரவீன் பக்ஷி, ஹாரீஸ் ஆகியோர் உள்ளனர். அவர்களை விடுத்து பிபின் ராவத்தை ராணுவத் தளபதியாக மத்திய அரசு தேர்வு செய்தது எதிர்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளானது.