நாளை வங்கிகள் 'ஸ்டிரைக்':10,000 கிளைகள் மூடப்படும்
நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள், 28ல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்படலாம்.யு.எப்.பி.யு.,
எனும் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 28ல், ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
அதையடுத்து, மத்திய தொழிலாளர் துறை அதிகாரிகள், யு.எப்.பி.யு., நிர்வாகிகளுடன், நேற்று நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. அதனால், 28ல் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் உறுதியாகியுள்ளது. அதில், நாடு முழுவதும், 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மூத்த துணைத் தலைவர், டி.தாமஸ் பிராங்கோ கூறியதாவது: வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில், மத்திய அரசு படிப்படியாக ஈடுபட்டு வருகிறது. ஊழியர் சங்கங்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடுக்கவும், நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனினும், வாரம், ஐந்து நாட்கள் மட்டுமே, வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட உள்ளோம். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், வங்கி ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்தனர். நான்கு நாட்களுக்கு மட்டுமே, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதை அதிகரித்து தர வேண்டும் என்றும் கோரியுள்ளோம். இப்போராட்டத்தில், பொதுத்துறை வங்கிகளுடன், ஏராளமான தனியார் வங்கிகளும் பங்கேற்கின்றன. இதனால் தமிழகத்தில், 10 ஆயிரம் வங்கிக் கிளைகள் மூடப்படும்; 28 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.