பொருளாதார சுதந்திரம் : இந்தியா 143ஆவது இடம்!
அமெரிக்காவின் முன்னணி பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
பொருளாதார சுதந்திரத்தில் இந்தியா மிக மோசமாக 143ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மரபு அறக்கட்டளை என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ‘இந்தியாவின் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி கடந்த ஐந்தாண்டுகளாக மந்தமாகவே இருந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் வருடாந்திர வளர்ச்சி 7 சதவிகிதமாகவே உள்ளது. பொருளாதார சுதந்திரத்தை உருவாக்கும் கொள்கைகளிலும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி இல்லை’ என்று தெரிவிக்கிறது.
இந்தியாவை பெரும்பான்மை சுதந்திரமற்ற பொருளாதாரமாக குறிப்பிடுவதன் மூலம், அதன் சந்தை சார்ந்த பொருளாதார சீர்திருத்தங்கள் ஒழுங்கின்றி இருப்பதாக தெரிவிக்கிறது இந்த ஆய்வு. மேலும் கட்டுப்பாடுகள் நிறைந்த இந்த சூழல் தனியார் துறையை விரிவுபடுத்தும் தொழில் முனைவோரை ஊக்குவிக்க மறுக்கிறது.
தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தான் (163), மாலத்தீவுகள் (157) ஆகிய நாடுகள் மட்டுமே இந்தியாவுக்கு பின்னால் உள்ளன. நேபாளம் (125), இலங்கை (112), பாகிஸ்தான் (141), பூடான் (107), மற்றும் வங்காளதேசம் (128) ஆகிய நாடுகள் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் உள்ளன.
தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் இந்தியா உலக நாடுகளைப் போலவே மேம்பட்டிருக்கிறது. எனினும் ஒருபுறம் அதீத செல்வம், மறுபுறம் கொடுமையான வறுமை என்கிற ஏற்றத் தாழ்வுதான் இந்தியாவை பின்னுக்குத் தள்ளியிருப்பதாக ஆய்வு கூறுகிறது.