''சிறப்பு பாஸ்போர்ட் மேளா, சென்னையில், பிப்., 4ல் நடக்கிறது; 2,500 பேர் பயன் பெறலாம்,'' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, அசோக்பாபு தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவர் கூறியதாவது: தற்போது, பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அலுவலகம் செல்வோர், விருப்ப நாட்களில், முன்பதிவு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் பயன் பெறும் வகையில், விடுமுறை நாளான, பிப்., 4ல், சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்துகிறோம். சாலிகிராமம், தாம்பரம் மற்றும் அமைந்தகரையில் உள்ள, பாஸ்போர்ட் சேவை மையங்கள், பிப்., 4ல் இயங்கும். இந்த சிறப்பு பாஸ்போர்ட் மேளாவிற்கு விண்ணப்பிக்க, www.passportindia.gov.in மூலம், ஆன்லைனில் பதிய வேண்டும். ஏ.ஆர்.என்., என்ற, விண்ணப்ப பதிவு எண் மூலம், ஆன்லைனிலேயே கட்டணம் செலுத்த வேண்டும்; சாதாரண கட்டணம் தான். பின், சந்திப்புக்கான முன்பதிவு நேரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன்படி, குறிப்பிட்ட நேரத்திற்கு, பாஸ்போர்ட் அலுவலகம் செல்ல வேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் சுய கையெழுத்திட்ட, ஒரு, 'செட்' நகல்களை எடுத்து செல்ல வேண்டும். இந்த மேளாவில், தத்கல் முறையில் விண்ணப்பிக்க முடியாது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள், மறுக்கப்பட்ட டோக்கன்கள் ஏற்கப்படாது. அலுவலத்திற்கு சென்று, நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. 2,500 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்; விண்ணப்பிக்க, கடைசி தேதி ஏதுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.