மும்பை- அகமதாபாத் வழிதடத்தில் கடலுக்கு அடியில் 7 கிமீ பயணிக்கும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில்
புதுடெல்லி: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம், மும்பை- அகமதாபாத் வழிதடத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இ
தற்கான நிதி உதவிகளை ஜப்பான் நாடு வழங்க உள்ளதாகவும், விரைவில் இவ்விரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பான் பிரதமாரான ஷின்சோ அபே வரும் 11ம் தேதி மூன்று நாள் சுற்று பயணமாக இந்தியா வருகிறார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து புல்லட் ரயில் திட்டம் உட்பட பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார். இந்தியாவில் முதல் புல்லட் ரயில் திட்டம், மும்பை- அகமதாபாத் இடையே செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 503 கி.மீ தூரம் கொண்ட இவ்விரு நகரங்களுக்கும் இடையே சாதாரணமாக ரயிலில் பயணம் மேற்கொள்ள 8 மணி நேரமாகும்.
ஆனால், புல்லட் ரயிலில் 2 மணிநேரத்தில் சென்று விடலாம்.
தானேவில் இருந்து விரார் வரையிலான சுரங்க ரயில் பாதையில் 7 கிலோ மீட்டர் பாதை கடலுக்கடியில் நிறுவப்படவுள்ளது. சோதனை ஓட்டத்துக்கு என 'தானே முதல் விரார்' பகுதி வரையிலான 21 கி.மீ தெரிவுசெய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கடலுக்கடியில் 70 அடி ஆழத்திலிருந்து மணல், பாறைகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றன. 2018ம் ஆண்டு துவங்கப்படும் இத்திட்டம் வருகிற 2023ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இத்திட்டம் இந்தியாவில் துவங்குவதற்கு தேவையான ரூ.53,440 கோடி நிதி உதவியினை ஜப்பான் நாடு வழங்க உள்ளது. இந்த அதிவேக ரயில் திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, மேலும் 7 புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.