அரசு இ - சேவை மையங்களில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்?
அரசு, 'இ - சேவை' மையங்களில், இணையதளம் மூலம், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் சேவையை, உணவு துறை துவக்க உள்ளது.
தமிழகத்தில், ரேஷன் கடைகளில், குறைந்த விலையில் உணவு பொருட்கள் வாங்குவது உட்பட, அரசின் பல சலுகைகளைப் பெற, ரேஷன் கார்டு அவசியம்.
ரேஷன் கார்டு பெற வேண்டும் எனில், உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த, 60 நாட்களுக்குள் கார்டு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால், குறித்த காலத்தில் ரேஷன் கார்டு வழங்கப்படுவதில்லை. இதற்கு தீர்வாக, புதிய நடைமுறை வர உள்ளது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய ரேஷன் கார்டுக்கு, உணவு வழங்கல் துறையின், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் சேவைக்கான பணி முடிந்துள்ளது. இது குறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
தற்போது, முகவரி மாற்றம்; பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகளை இணையதளத்தில் செய்யலாம். தமிழகத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், எல்காட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, 10 ஆயிரம், 'இ - சேவை' மையங்கள் உள்ளன. அவற்றின் மூலமும், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் துவங்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.