திறனறி தேர்வில் பின்தங்கும் மாணவர்கள்!!!
மாணவர்களின் கற்றல்திறனை பரிசோதிக்கும் வகையில் நடத்தப்படும், திறனறி தேர்வுகளில், அரசுப்பள்ளிகளின் பங்களிப்பு, சொற்ப அளவில் இருப்பதால், சிறப்பு வகுப்பு மூலம், பயிற்சி
அளிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் சார்பில், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்க, திறனறி தேர்வுகள் நடத்தி, ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், மத்திய அரசு சார்பில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, வருவாய் வழி திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், ஏழாம் வகுப்பில், 65 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பதோடு, பெற்றோரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள், தேர்வு எழுதலாம். இதில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை, மாதம் 500 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய், ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
இதேபோல், தமிழ்நாடு ஊரக மாணவர்களுக்கான திறனறி தேர்வு, மாநில அரசால் நடத்தப்படுகிறது. இத்தேர்வு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கானது. எட்டாம் வகுப்பு இறுதித்தேர்வில், 65 சதவீதத்துக்கும் அதிகமான, மதிப்பெண் பெற்றவர்கள், இத்தேர்வில் பங்கேற்கலாம்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு, 4 ஆயிரம் ரூபாய், ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
இந்த இரு தேர்வுகளுக்கும், மாநில அரசு பாடத்திட்டத்தின்படி, கேள்விகள் இடம்பெறும். இத்தேர்வுகளில், அரசுப்பள்ளிகளின் பங்களிப்பு சொற்ப அளவில் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. இதனால், மாலைநேர சிறப்பு வகுப்புகள் மூலம், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, திறனறி தேர்வில் பங்கேற்க, பயிற்சி அளிக்குமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ’தேசிய மாணவர் திறனறித்தேர்வு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்ட அடிப்படையில் கேள்விகள் இடம்பெறுவதால், சமச்சீர் கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணவர்களில், 95 சதவீதம் பேர் பங்கேற்பதில்லை.
மாநில பாடத்திட்டத்தின் படி நடத்தப்படும், திறனறி தேர்வுகளிலும், அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்காமல் இருப்பதால், ஊக்கத்தொகை பெற முடியாத நிலை உள்ளது.
அடுத்த கல்வியாண்டு முதல், திறனறி தேர்வுகளில், பங்கேற்போரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், பாடவாரியாக முக்கிய பகுதிகளுக்கு, தேர்வுகள் நடத்தி, பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்