உள்ளாட்சி தேர்தல்: ஒத்திவைக்க மறுப்பு !!
உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ள
து.
உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலை தமிழக அரசு தள்ளி வைத்து அதற்கான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சி மன்றங்களின் நிர்வாகத்தை கவனிக்கும் தனி அதிகாரிகளின் பதவி காலம் மேலும் ஆறு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் கடந்த
ஆண்டு அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால், கடந்த அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ‘வார்டுகளில் இடஒதுக்கீடு செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்டது விதிகளுக்கு முரணாக உள்ளது’ என்று கூறி, தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்தது. மேலும், இடஒதுக்கீடு முறைகளை முறையாக பின்பற்றி அறிவிப்பு வெளியிட்டு, டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்பின், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தொடர்பான சட்டங்களை திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார். அந்த சட்ட திருத்த முன்வடிவில் கூறப்பட்டுள்ளதாவது: மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகளுக்கான தேர்தல் தேதியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த சட்ட மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவில் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் தான் நடத்தப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு, பட்டியலிட்ட வழக்குகளில் 29வது வழக்காக இருப்பதால் தேர்தலை ஒத்திவைக்க ஆணையம் முறையீடு செய்தது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்து உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க மறுத்து விட்டது.