ரேஷன் கார்டில் முகவரி மாற்றம்: இணைய தள வசதி துவக்கம்
இணையதளம் மூலம், ரேஷன் கார்டில், முகவரி மாற்றம் செய்யும் வசதி துவக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம்
உள்ளிட்ட பணிகள், உணவு வழங்கல் உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அங்குள்ள ஊழியர்கள், குறித்த காலத்தில் பணிகளை செய்யாததால், பலர் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, 'டி.என்.பி.டி.எஸ்.டாட் காம்' என்ற இணையதளம் மூலம், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகளை மேற்கொள்ளும் சேவையை, உணவுத் துறை துவக்கியுள்ளது.
இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதற்கட்டமாக, இணையதளம் மூலம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்யலாம். ஆனால், அதன் விபரம், கம்ப்யூட்டரில் பதிவாகும்; ரேஷன் கார்டில் பதிவாகாது. எனவே, இணையத்தில் பதிவு செய்த விபரத்தை, அலுவலகத்தில் காட்டி, கார்டில் பதிவு செய்து கொள்ளலாம்.இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும். பின், இணையதளம் மூலம், புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி செய்யப்படும். ஸ்மார்ட் ரேஷன் கார்டு கொடுத்த பின், அனைத்து பணிகளும், இணையதளத்தில் மட்டும் செய்தால் போதும். இவ்வாறு அவர் கூறினார்.