வலைதளத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்ய புதிய கட்டுப்பாடு !!
இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அதிரடி வலைதளங்களில், உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு, புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
இது குறித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையமான, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில், ஏராளமான வலைதள நிறுவனங்கள், உணவுப் பொருட்களை, நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகின்றன. அவற்றில், பல நிறுவனங்கள், தரமற்ற உணவுகள் மற்றும் சேவைகளை வழங்குவதாக, பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவித்து உள்ளனர்.
விதிமுறைகள்:இதையடுத்து, உணவுப் பொருட்களை வலைதளத்தில் விற்பனை செய்யும் நிறுவனங்களை, 2011ம் ஆண்டின், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, அவை பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.அதன்படி, முதற்கட்டமாக, வலைதள உணவுத் தொழில் நிறுவனங்கள், சி.எல்.ஏ., எனப்படும், மத்திய அரசின், உரிமம் வழங்கும் ஆணையத்திடம், அவற்றின் வர்த்தகம் தொடர்பான அனைத்து விபரங்களையும் தெரிவித்து, தொழில் உரிமம் பெற வேண்டும்.
இதற்கு, உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் துவங்கி, சேமிப்பு கிடங்கு, வினியோகம், விற்பனை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிவிக்க வேண்டும்.உணவுப் பொருட்களின் தரத்தில், எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், அவற்றை தயாரிப்பது முதல், நுகர்வோருக்கு கொண்டு சேர்ப்பது வரை, பயிற்சி பெற்றவர்களையே பயன்படுத்த வேண்டும்.
உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடு இருந்தால், அதற்கான முழு பொறுப்பும், தயாரிப்பு நிறுவனங்கள், இறக்குமதி நிறுவனங்கள், விற்பனையாளர்கள் ஆகியோருக்கு உள்ளது என்பதை, வலைதளத்தில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.அனைத்து வலைதள உணவு நிறுவனங்களும், உணவு தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனையாளர்கள் ஆகியோருடன், உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளின் கீழ், ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
உரிமம்
நுகர்வோர் தெரிவிக்கும் புகார்களை, உடனடியாக, உணவு தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோருக்கு தெரிவித்து, அவற்றுக்கு தீர்வு காண வேண்டும்.உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை, உடனடியாக, வலைதள பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.உணவு தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் ஆகியோர், தவறான விளம்பரங்கள், படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு, நுகர்வோரை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். இதை, வலைதள உணவு நிறுவனங்கள், உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஓட்டல்கள், சிற்றுண்டி விடுதிகள், உணவு மையங்கள், உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரின் முகவரி விபரங்களை வெளியிடும் வலைதள நிறுவனங்கள், உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, உரிமம் பெற தேவையில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.