தமிழகத்தில் 'நீட்' தேர்வு கிடையாது-சட்டசபையில் மசோதா நிறைவேறியது
சென்னை,:''நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும், சட்ட முன்வடிவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும். பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, முதல்வர் பன்னீ
ர்செல்வம் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்: தி.மு.க., - பொன்முடி: மருத்துவக் கல்லுாரிகளில், தற்போதுள்ள நடைமுறைப்படி, மாணவர் சேர்க்கை தொடர்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ள, சட்ட முன்வடிவு, அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கது; இச்சட்டம் நிரந்தரமாக்கப்பட வேண்டும்.
காங்., - விஜயதாரணி: இந்த சட்ட முன்வடிவை, காங்கிரஸ் வரவேற்கிறது. அதேநேரம், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், நமது கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும்
அமைச்சர் விஜயபாஸ்கர்: சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 'நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம்; தேவைப்பட்டால், தனி சட்டம் கொண்டுவருவோம்' என, மறைந்த முதல்வர் அறிவித்தார். அதன்படி, தற்போது சட்ட முன்வடிவு கொண்டு வந்துள்ளோம்.
முதல்வர் பன்னீர்செல்வம்: நீட் தேர்வை ஆரம்பத்திலேயே, ஜெயலலிதா எதிர்த்தார். அவர் வழியில் செயல்படும் தமிழக அரசு,நீட் தேர்வை அனுமதிக்காது. தற்போது கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும்.
மேலும், பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற, சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பின், மருத்துவக் கல்லுாரிகளில், பொது நுழைவுத் தேர்வு இல்லாமல், தற்போதுள்ள, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்களை சேர்ப்பதற்கான, புதிய சட்டமுன்வடிவு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.