வெளிநாடு வாழ் இந்தியர்கள் 'ஆதார்' பெறுவது எப்படி?
வெளிநாடு வாழ் இந்தியர்கள், 'ஆதார்' அட்டை பெறுவதில், சில பிரச்னைகள் நீடித்து வருகின்றன.வெளிநாடு வாழ் இந்தியர்கள், சில காரணங்களால், ஆதார் அட்டையை எளிதில் பெற முடிவ
தில்லை. முதலில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, ஆதார் அட்டை வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதால்,
அவர்களுக்கும் ஆதார் அட்டை அவசியம் என, மத்திய அரசு கருதியது; தற்போது, அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.தமிழகத்தை பொறுத்தவரை, ஆதார் அட்டை பதிவை, மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இங்கு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஆதார் பதிவு செய்வதில், சில பிரச்னைகள் உள்ளன.இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆதார் அட்டை பெறுவதற்கு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், நேரில் வர வேண்டும். இந்திய குடிமக்களுக்கு என்ன நடைமுறைகள் உள்ளனவோ, அவையே அவர்களுக்கும் பொருந்தும். ஆனால், அவர்களது பெயர், 2011 மக்கள் தொகை பட்டியலில் இருப்பது அவசியம்; தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலும் இருக்க வேண்டும்.
அதில் பெயர் இல்லாதவர்கள், இ - சேவை மையங்களுக்கு சென்று, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும். பின், அவர்களுக்கு, 'டின்' எனப்படும் அடையாள எண் வழங்கப்படும். அதன் அடிப்படையில், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.அத்துடன், அடையாள சான்று, வயது சான்று மற்றும் முகவரி சான்றுகளுக்கான அத்தாட்சியை இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.