ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கத் திட்டம்


         பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் அந்த வகுப்பைச் சேர்ந்த தகுதியான நபர்கள்
ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளனர்.


 இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையாக நிரப்பப்படும் வரை அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பிட திட்டமிடப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9,000, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000 என்ற வீதங்களில் ஒரு கல்வி ஆண்டில் கோடை விடுமுறை தவிர்த்து 10 மாதங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி அமைந்திருக்கும் உள்ளூர் மற்றும் கிராமத்தில் உள்ள அந்தந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்றவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர்.
 பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களை கல்வியாண்டு முடியும் வரை (கோடை விடுமுறை தவிர்த்து) அல்லது காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் ஆசிரியர்களைக் கொண்டு முறையாக நிரப்பப்படும் வரை இதில் எது முந்தையதோ அதுவரையில் பணியில் தொடர அனுமதிக்கப்படுவர். இது முற்றிலும் தாற்காலிகமானது.
 ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தாற்காலிகமாக, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு வரும் 11ஆம் தேதி திருச்சி மிளகுபாறை ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வாழவந்திநாடு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் தலா ஒரு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பட்டதாரி ஆசிரியர்கள் நிலையில் தமிழ், அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வி ஆசிரியர் பாடங்களுக்கு தலா ஒரு ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
 செங்கரை அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ஆங்கிலம், இயற்பியல் பாடங்களில் தலா 1 பணியிடம் காலியாக உள்ளது.

முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் பாடத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், சமூக அறிவியல் பாடத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளியில் கணித பாடத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
 தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி, இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பின் அதன் சான்றிதழ்
 இதரப் பள்ளிகளில் பணியாற்றியிருப்பின் முன் அனுபவச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றுடன் காலை 8 மணிக்கு முன்னர் தேர்வு நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022