ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்ற அதிகாரிகள்

ஜல்லிக்கட்டுக்காக நடந்த மெரினா போராட்டத்தின் எழுச்சியில், யார் பாடம் கற்றுக்கொண்டு இருக்கிறார்களோ இல்லையே தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கற்றுக்கொண்டுள்ளது என்கிறார்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்.



நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட ஆசிரியர்கள் முடிவு செய்தி இருந்தனர். இதற்காக மாநில அளவில் இருந்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் திரண்டு வந்திருந்தனர்.அவர்களை செங்கல்பட்டு,கிழக்குக் கடற்கரை சாலை ,பூந்தமல்லி என்று சென்னைக்கு வெளியே மடக்கி தமிழகக் காவல்துறை கைது செய்தனர்.ஆனாலும் திட்டமிட்டப்படி சுமார் 4,000 பேர் தொடக்கக்கல்வி இயக்குநர்  அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் அரண்டு போன காவல்துறை அதிகாரிகள் உடனடியாகப் பள்ளிக்கல்வித்துறை செயலருக்குத் தகவல் தெரிவித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.போராட்டம் நடத்திய ஒரு மணி நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இறங்கி வந்தது இன்றுதான் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தினர் ஆச்சரியத்தோடு.

                          இது தொடர்பாக,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ச.மோசஸிடம் பேசினோம்.அவர் கூறுகையில்,"எங்களின் கோரிக்கைகளை நேரில் அழைத்துக் கேட்டு நிறைவேற்றுவதாக உறுதியளித்த பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.எங்களின் 15 அம்ச கோரிக்கைகளில்,4 அடிப்படைக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு உறுதியளித்துள்ளது.அதன்படி,புதிய பென்சன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை விரைந்து பெறப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பை 8வது ஊதியக்குழு பரிந்துரையில் ஈடுசெய்யப்படும், அரசாணைக்கு முரணாக தொடக்க கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்த 5 ஆணைகள் திரும்ப பெறப்படும்.

ஊராட்சிகளைத் தவிர்த்த மற்றப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சுகாதார அலுவலர்களை நியமிக்க உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும்.உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலக காலிப்பணியிடங்கள் ஓரிரு நாட்களில் நிரப்பப்படும்,காலிப்பணியிடங்கள் நிரப்ப அடுத்தவாரம் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று உறுதியாகத் தெரிகிறது.

இது எங்களுக்கு,எங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.அதில் மகிழ்ச்சியே.ஆனால் இந்த நிலையை எட்ட நாங்கள் பெரிய பெரிய போராட்டங்களையெல்லாம் நடத்தவேண்டி இருந்தது.10 ஆயிரம் பேரைத் திரட்டி சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குநர்  அலுவலகத்தை முற்றுகையிடுகிறோம் என்று அறிவித்தாலும் அறிவித்தோம்.அதில் இருந்து எங்களை போலீசார் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர்.போராட்ட நாளான இன்று காலையிலேயே என்னை சென்னை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்துக்கொண்டனர்.எங்கள் சங்கத்தின் மற்ற நபர்களோடு எனக்கு தொடர்பு எதுவும் இல்லாமலும் போலீசார் செய்துவிட்டனர்.

                  

உங்களின் கோரிக்கைகள் என்ன சார்,சொல்லுங்க நாங்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.எனக்கு இருந்த போன் தொடர்பையும் நீங்க பறித்துக்கொண்டீர்கள்.அப்புறம் எப்படி நான் போராட வருபவர்களை நிறுத்த முடியும் என்றேன்.உடனே அவர்கள் செய்த ஏற்பாட்டின்படி வேறு ஒரு போன் கிடைத்தது.அதில் மற்றவர்களை தொடர்பு கொண்டு பேசுவதற்குள் காலை மணி 11 ஆகிவிட்டது.அதற்குள் சுமார் இரண்டாயிரம் பேர் டி.பி.ஐ. அலுவலகத்தை முற்றுகையிடத் தொடங்கிவிட்டனர்.இன்னும் 8 ஆயிரம் பேர் செங்கல்பட்டு வழியாகவும்,கிழக்குக் கடற்கரை சாலை வழியாகவும்,பூந்தமல்லி வழியாகவும் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்தது.கூட்டம் பெருகினால் பிரச்னை பெரிதாகும் என்று கருதிய போலீசார் உடனடியாக என்னையும் எங்கள் சங்கத்தின் முதன்மைப் பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு தலைமைச் செயலகம் சென்றனர்.

அங்கு,பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அறையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, முதன்மைச் செயலாளர் டி.சபீதா, தொடக்கக்கல்வி இயக்குநர் இளங்கோவன், இணை இயக்குநர் சசிகலா ஆகியோர் இருந்தனர்.எங்களின் கோரிக்கைகளை அவர்கள் கேட்டனர்.முதலில் அவர்கள் மிகக் கடுமையாகப் பேசினர்.பின்னர் எங்களின் சிக்கல்களை புரிந்துகொண்டு இறங்கி வந்தனர்.அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர்" என்று விவரித்தார் பரபரப்பாக.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank