மின் வாரிய உதவி பொறியாளர் நேர்காணல் எப்போது?
உதவி பொறியாளர் நியமனத்திற்கான நேர்காணல் அறிவிப்பை, மின் வாரியம் விரைவில் வெளியிட உள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், உதவி பொறியாளர் என, 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன.
முறைகேட்டை தடுக்க, எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம், ஊழியர்களை நியமிக்க, மின் வாரியம் முடிவு செய்தது. அதன்படி, 375 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு, 2016 ஜன., மாதம்; உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட, 2,175 பதவிகளுக்கு, ஜூன், ஆக., மாதங்களில், எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதை, அண்ணா பல்கலை நடத்தியது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தேர்வு தொடர்பாக, சிலர் தொடர்ந்த வழக்கால், 375 உதவி பொறியாளர்; 525 தொழில்நுட்ப உதவியாளர்; 900 கள உதவியாளர் பதவிகளின் மதிப்பெண் வெளியிடவில்லை. மற்ற பதவிகளுக்கான மதிப்பெண் விபரம் வெளியிடப்பட்டது.
'கட் ஆப்' மதிப்பெண் : பின், 25 ஸ்டெனோ டைப்பிஸ்ட், 50 உதவி வரைவாளர், 25 இளநிலை தணிக்கையாளர் பதவிகளின், 'கட் ஆப்' மதிப்பெண் வெளியானது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, மின் வாரியம், உதவி பொறியாளர் மதிப்பெண்ணை வெளியிட்டது. இந்த வழக்கில், மின் வாரியத்துக்கு சாதகமாக, சமீபத்தில் தீர்ப்பு வந்தது. இதையடுத்து, உதவி பொறியாளர் தேர்வின், 'கட் ஆப்' மதிப்பெண் வெளியிடப்பட்டது. ஆனால், மற்ற பதவிகளுக்கு, இதுவரை, 'கட் ஆப்' மதிப்பெண் வெளியிட வில்லை. இந்த பணிகளை விரைவாக முடிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேர்வு எழுதியவர்கள், முடிவை எதிர்பார்த்து, பல மாதங்கள் காத்திருக்கின்றனர்; அவர்கள், தினமும் போன் செய்து, 'நேர்காணல் எப்போது நடக்கும்' என கேட்கின்றனர்.
பணிகள் தாமதம் : நீதிமன்ற வழக்கு, திடீர் அரசியல் பரபரப்பு ஆகிய காரணங்களால், 'கட் ஆப்' மதிப்பெண் மற்றும் நேர்காணல் பணிகள் தாமதமானது. தற்போது, சகஜ நிலை திரும்பியுள்ளது. எனவே, ஓரிரு தினங்களில், உதவி பொறியாளர் நேர்காணல் அறிவிப்பு வெளியிடப்படும். விரைவில், மற்ற பதவிகளின், 'கட் ஆப்' மதிப்பெண் வெளியாகும்; உதவி பொறியாளர் நேர்காணல் முடியும் தறுவாயில், மற்ற பதவிகளின் நேர்காணல் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.