CBSE பள்ளிகளில் 3ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டு முதல், மூன்றாம் வகுப்பு வரை, தமிழ் பாடம் கட்டாயமாகிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சமச்சீர் மற்றும் சி.பி.எஸ்.இ., என, பல பாடத் திட்டங்களையும், ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என, பல பயிற்று மொழிகளும் பின்பற்றப்படுகின்றன. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, தேனி, கோவை போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மற்ற மாநில மாணவர்களும் படிக்கும் வகையில், பிற மாநில மொழிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து பள்ளிகளிலும், தமிழை கட்டாய பாடமாக்கி, 2006ல், தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, அனைத்து பிற மொழி பள்ளிகளிலும், கடந்த கல்வி ஆண்டு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் கட்டாய பாடமானது. இதேபோல், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழை கட்டாய பாடமாக கற்பிக்க, 2014ல், தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி, முதலில், ஒன்றாம் வகுப்புக்கும், பின், இரண்டாம் வகுப்புக்கும் தமிழ் கட்டாயமானது. வரும் கல்வி ஆண்டில், மூன்றாம் வகுப்புக்கும், தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இதற்கான தமிழ் புத்தகங்களை, தமிழக பாடநுால் கழகத்தில், பள்ளிகள் கொள்முதல் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.