சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஃபேக் நியூஸ் பின்னே இருக்கும் அரசியலும், ஆபத்தும்! #FakeNews !!
நீங்கள், வாட்ஸ்அப்பிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ உண்மையான தமிழனாக இருந்து, ஷேர் செய்யும் ஃபேக் நியூஸ்களால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படுகின்றன என என்றாவது யோசித்ததுண்டா?
உங்களுக்கு ஒரு சிறிய உதாரணம். கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத் பகுதியில் திடீரென ஒரு போட்டோவும் செய்தியும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து நாய் மாமிசத்தை போலீசார்
கைப்பற்றியதாகச் சொன்ன செய்திதான் அது. உடனே வைரலாகிறது இந்த விஷயம். எப்போதும் கூட்டம் நிரம்பிவழியும் அளவுக்கு பிரபலமான அந்தக் கடை, அடுத்தடுத்த நாட்களில் வெறிச்சோடிப்போகிறது. சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளால் அதிர்ச்சியடைந்த மாநகராட்சி அதிகாரிகள், உடனே அந்த உணவகத்தின் மாதிரிகளை எடுத்து சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். இறுதியில் அந்தச் செய்தி போலியானது எனத் தெரியவருகிறது.
சில நாட்களில், இந்தப் போலியான செய்தியைப் பரப்பிய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்படுகிறார். சமூக வலைதளங்கள் வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டன. ஆனால், அந்த உணவகத்தின் வியாபாரம், நம்பகத்தன்மை அனைத்துமே ஒரே நாளில் சிதைந்துவிட்டன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஒருவேளை அதேபோன்றதொரு செய்தி நம்மூரிலும் வந்திருந்தால், நாமும் இதையேதான் செய்திருப்போம்.
நீங்கள் சாதரணமாக, ஏதோ ஒரு நொடியில் பகிரும் செய்திகளினால், மறைமுகமாக ஏற்படும் பிரச்னைகள் இப்படித்தான் இருக்கின்றன.
ஜனகண மன பாடல் யுனெஸ்கோவால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது, பீமன் மகனான கடோத்கஜனின் நிஜமான எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது, குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவிவிட்டது, திருநள்ளாறு கோயிலின் மேலே வரும்போது செயற்கைக்கோள் நின்றுவிடும், இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் தாக்கும் என நாசா அறிவிப்பு (வதந்தியால் ரொம்பப் பாதிக்கப்பட்டது நாசாவாகத்தான் இருக்கும்!), இந்தக் குழந்தையின் புகைப்படத்தை ஷேர் செய்தால் ஃபேஸ்புக் ஒரு ரூபாய் கொடுக்கும், இந்த சாமி படத்தைப் பகிர்ந்தால் நல்லது நடக்கும், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 1000 ரூபாய் நோட்டு, இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும், மோடி இளைஞர்களுக்காக 10 ஜி.பி டேட்டா அனைவருக்கும் இலவசமாகத் தருகிறார், இலங்கைத் தமிழர்களுக்காக ஐ.நா.சபை வாக்கெடுப்பு நடத்துகிறது, 99 ரூபாய்க்கு 4G போன்...ஸ்ஸ்ஸ்..படிக்கும் போதே கண்ணைக் கட்டுதா? இது எல்லாமே இன்னும் கூட பரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் வதந்திகள். இவற்றுள் பாதி வதந்திகளுக்கு, குறைந்தது ஐந்து வயது இருக்கும்.
இவற்றில் பெரும்பாலானவற்றைப் பார்த்தால் 'அட...இதையெல்லாம் பார்த்தாலே பொய்ன்னு தெரியுதே... இதை எல்லாம் படிக்காத பாமரர்கள்தான் பரப்புவாங்க'ன்னு நீங்கள் கேட்கலாம். ஆனால், இதனை பாமரர்கள் மட்டுமல்ல, மெத்தப் படித்த மேதாவிகளே இதனைப் பரப்புகின்றனர் என்பதுதான் வேதனை. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் க்ரூப்களில் இருக்கும் அனைவருமே இதனை ஒருமுறையாவது பார்த்திருப்பீர்கள்.