‘ஆதார்’ எண் அடிப்படையில் சில நிமிடங்களில் ‘PAN’ எண் பெறலாம்
‘ஆதார்’ எண் அடிப்படையில் சில நிமிடங்களில் வருமான வரி
‘பான்’ எண்ணை பெறும் திட்டத்தை வருமான வரித்துறை செயல்படுத்த உள்ளது. அதுபோல், வருமான வரியை
ஆன்லைனில் செலுத்த வசதியாக விரைவில் மொபைல் ஆப்
அறிமுகம் ஆகிறது.
பான் எண்
வருமான வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை சார்பில் நிரந்தர கணக்கு எண் (பான்) அளிக்கப்படுகிறது. தற்போது, நாடு முழுவதும் 25 கோடி பேர் பான் கார்டு வைத்துள்ளனர். ஆண்டுதோறும் 2 கோடியே 50 லட்சம் பேர், புதிதாக பான் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய வடிவிலான பான் கார்டுகளை கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் வருமான வரித்துறை வழங்கி வருகிறது. வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்துவதற்கும், எடுப்பதற்கும் ‘பான்’ எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் ஆகும். ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கத்துக்கு பொருள் வாங்கும்போதும் பான் எண்ணை குறிப்பிட வேண்டும்.
சில நிமிடங்களில் பான் எண்
இந்நிலையில், ஒரு சில நிமிடங்களில் ‘பான்’ எண் பெறும் வசதியை வருமான வரித்துறை செயல்படுத்த உள்ளது. ‘ஆதார்’ கார்டுக்கு புகைப்படம் எடுக்கும்போது, விரல் ரேகை, கண்ணின் கருவிழி உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
சம்பந்தப்பட்ட நபர் எப்போது விரல் ரேகையை பதித்தாலும், அவரது பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக தெரிந்து விடும். இந்த வசதியை பயன்படுத்தி, ‘ஆதார்’ எண் அடிப்படையில் ஒருவரது விவரங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, சில நிமிடங்களிலேயே அவருக்கு ‘பான்’ எண் வழங்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
இதன்மூலம், எளிதாக பான் எண் பெற முடிவதால், இன்னும் ஏராளமானோரை வருமான வரி வளையத்துக்குள் கொண்டுவர முடியும் என்று வருமான வரித்துறை கருதுகிறது.
மொபைல் ஆப்
இதுதவிர, வருமான வரியை ஆன்லைனில் செலுத்த வசதியாக மொபைல் ஆப் (செயலி) ஒன்றை உருவாக்கும் பணியிலும் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களில் இந்த ‘ஆப்’பை பயன்படுத்தி, வருமான வரி செலுத்தலாம், புதிதாக ‘பான்’ கார்டுக்கு விண்ணப்பிக்கலாம், தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கு நிலவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து வருமான வரி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மொபைல் ஆப் உருவாக்கும் பணி தொடக்க நிலையில் உள்ளது. மத்திய நிதி அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.