பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு : 1,000 ஆசிரியர்கள் கலக்கம்
டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால், 1,000 ஆசிரியர்களின்
எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித்தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.அதில், 'அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மை அங்கீகாரம் பெறாத பள்ளிகளில், 2010 ஆகஸ்டிற்குப் பின், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோர், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், இந்த தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதார், பணிநீக்கம் செய்யப்படுவர்' என, கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால், அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். திடீரென தேர்வை அறிவித்துவிட்டு, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அங்கீகாரம் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வுக்கு பதில், ஆண்டு தோறும் புத்துணர்வு பயிற்சி முகாம் நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, அரசு பள்ளிகளில், 'டெட்' தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, புத்துணர்வு பயிற்சி முகாம் நடத்தலாம். மாறாக, திடீரென, 'டெட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, ஆசிரியர்களுக்கு கெடு விதிப்பது பிரச்னையை அதிகரிப்பதாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.