மத்திய அரசு ஊழியர்கள், பொது சேமநல நிதியில் 15 நாட்களில் பணம் பெறலாம்!!!
பொது சேமநல நிதியில் (ஜி.பி.எப்.) மத்திய அரசு ஊழியர்கள் பணம் எடுத்துக்கொள்வதற்கான விதிமுறைகளை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தளர்த்தி உள்ளது. அதன்படி, ஒப்புதல்
அளித்தல், பணம் அளித்தல் ஆகியவை 15 நாட்களில் முடிக்கப்படும். உடல்நல குறைவு போன்ற அவசர தேவைகளுக்கு 7 நாட்களில் பணம் பெறலாம்.
முன்பு, 15 ஆண்டு பணிக்காலத்தை முடித்த பிறகே, பணம் எடுக்க முடியும் என்று விதிமுறை இருந்தது. தற்போது, 10 ஆண்டு பணிக்காலம் முடிந்தாலே பணம் பெறலாம் என்று மாற்றப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி முதல் அனைத்து கல்வி செலவுகள், திருமணம், நிச்சயதார்த்தம், இறுதிச்சடங்கு, தனது மற்றும் தன் குடும்பத்தினரின் இதர நிகழ்ச்சிகள், தனது மற்றும் தன் குடும்பத்தினரின் மருத்துவ செலவுகள், வீட்டு சாமான்கள் கொள்முதல் போன்றவற்றுக்கும் பணம் பெறலாம் என்று விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.
12 மாத சம்பளம் வரை அல்லது இருப்புத்தொகையில் நான்கில் மூன்று பங்கு இதில் எது குறைவோ அத்தொகையை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவ செலவுகளுக்கு இருப்புத்தொகையில் 90 சதவீதம் வரை எடுக்க அனுமதி உண்டு.
இந்த புதிய உத்தரவால், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் அடைவார்கள்.