பிளஸ் 2 விடைத்தாள் ஏப்.1ல் திருத்தம்
பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1 முதல் துவங்கும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, 2ம் தேதி துவங்கியது. இதில், 9.33 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
மொத்தம், 2,434 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; 4,000 பறக்கும் படைகள், தேர்வு நாட்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுகள், 31ல் முடிகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தேர்வு நடக்கும் போதே, விடைத்தாள் திருத்தமும் துவங்கியது. அதனால், ஆசிரியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். விடைத்தாள் திருத்துவதா; தேர்வு பணி பார்ப்பதா; பிளஸ் 1 மாணவர்களை கவனிப்பதா என, குழப்பம் ஏற்பட்டது.
இதை தடுக்க, இந்த ஆண்டு தேர்வு முடிந்த பின், ஏப்., 1 முதல் விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுவையில், 150 விடை திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு, திருத்த பணிகள் நடக்க உள்ளதாக, தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏப்., 20க்குள், அனைத்து பாடங்களுக்கான திருத்தத்தையும் முடிக்க, தேர்வுத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.