ராணுவ கல்லூரியில் படிப்பு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்
ஏழாம் வகுப்புக்கு பின், இந்திய ராணுவ கல்லுாரியில் சேர, வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம். உத்தரகண்ட்
மாநிலம், டேராடூனிலுள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரியில், ஜனவரியில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். எட்டாம் வகுப்பு முதல், வகுப்புகள் நடத்தப்பட்டு, பின், ராணுவ அதிகாரிக்கான பயிற்சிகள் தரப்படும்; அதன்பின், பணியில் சேர்க்கப்படுவர்.
இந்த கல்லுாரியில் சேர, நுழைவுத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் தேர்ச்சிப் பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஜூன் 1, 2ல், எழுத்துத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு நடக்கிறது. இதில், ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகிய பாடங்களில், கேள்விகள் இடம் பெறும். தேர்வு எழுத, 2018 ஜன., 1ல், 11 வயது, ஆறு மாதங்கள் நிரம்பியும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பெற, 550 ரூபாய்க்கு, எஸ்.பி.ஐ., கிளையில், டி.டி., எடுத்து, 'கமாண்டன்ட், ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரி, டேராடூன், உத்தரகண்ட், அஞ்சல் எண் - 248 003' என்ற, முகவரிக்கு, விரைவு அஞ்சல் அனுப்பி பெற வேண்டும். 'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 31க்குள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்த விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்திலும் தெரிந்துக் கொள்ளலாம்.