4.4 Lack - Duplicate Students Entry in Mid Day Meal System
மதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் போலி மாணவர்கள்: அம்பலப்படுத்திய ஆதார் !!
மதிய உணவுத் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதால் 3 மாநிலங்களில் சுமார் 4.4 லட்சம் போலியான மாணவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவு
அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், மத்திய அரசு ஆண்டு தோறும் பல கோடி ரூபாய்களை இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்கிறது.
இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவை அடுத்து ஜார்கண்ட், மணிப்பூர், ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் சுமார் 4.4 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் இதற்கு முன்னர், மதிய உணவு உட்கொள்ளும் மாணவர்களுடன், மதிய உணவு உட்கொள்ளாத மாணவர்களையும் சேர்த்து போலியான பெயர்ப் பட்டியல் தயார் செய்து ஆண்டு தோறும் அரசுக்கு அதிகாரிகள் அனுப்பி வந்துள்ளனர். ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு விட்டதால் போலியான மாணவர்களை சேர்க்க முடியாது என்பதால், தற்போது மேற்கண்ட 3 மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 4.4 லட்சம் மாணவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர்.
3 மாநிலங்களில் மட்டுமே 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிய உணவு உட்கொள்ளாத போலி மாணவர்கள் இருந்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள போலியான மாணவர்கள் கண்டறியப்பட்டால், அரசுக்கு பெரும் தொகை மிச்சமாகும் என்பதில் ஐயமில்லை.