ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை
தபால் அலுவலகங்களில், 50 ரூபாய் செலுத்தி கணக்கு துவங்கினால், பாஸ் புக் மற்றும் ஏ.டி.எம்., கார்டு பெறலாம்;
பணம் எடுக்க கட்டுப்பாடுகளோ, கட்டணமோ கிடையாது' என்று, தபால் துறை அறிவித்துள்ளது. பண பரிவர்த்தனை செய்யவும், ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்கவும், வங்கிகள் விதிக்கும் அடுத்தடுத்த கட்டுப்பாடுகளால், வாடிக்கையாளர்கள் கவலைஅடைந்துள்ளனர்.
கணக்கு துவக்கலாம் : இதற்கு மாறாக, நலிவடைந்துள்ள தபால் துறையோ, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், எவ்வித சேவை கட்டணமுமின்றி, வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தர முன்வந்துள்ளது. அதன்படி, குறைந்தபட்சம், 50 ரூபாய் செலுத்தி, தபால் அலுவலகங்களில் கணக்கு துவக்கலாம்; பாஸ் புக், ஏ.டி.எம்., கார்டு பெற்று, பண பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ளும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், சேவூர் தபால் நிலைய துணை தபால் அதிகாரி சுப்ரமணியம் கூறியதாவது: தபால் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, எந்த தபால் நிலையத்திலோ, பிற வங்கி ஏ.டி.எம்.,களிலோ பணம் எடுக்கலாம்.
கட்டணம் கிடையாது : ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்; அல்லது எடுக்கலாம். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். வங்கிகளை போலவே, தபால் நிலைய சேமிப்பு கணக்குக்கு, 4 சதவீதம் வட்டி வழங்கப்படும். 'போஸ்ட் பேமென்ட் பாங்கிங்' என்ற புதிய திட்டத்தில், 4.5 சதவீதம் முதல், 5.5 சதவீதம் வரை, 'டிபாசிட்' வட்டியை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக, தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.