ஆதார் அட்டையை கட்டாயமாக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்


       ஆதார் அட்டையை பல்வேறு மானிய திட்டங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அரசின்
மானிய திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கக்கூடாது என கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ந்தேதி உத்தரவிட்டது.


பின்னர் இந்த கட்டுப்பாட்டை தளர்த்திய சுப்ரீம் கோர்ட், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், அனைத்து ஓய்வூதிய திட்டங்கள், வருங்கால வைப்புநிதி உள்ளிட்டவற்றுக்கு தானாக ஆதார் எண் தருவோரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என அதே ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி அறிவித்தது.

இறுதி முடிவு எடுக்கும் வரை மேற்படி திட்டங்களுக்கு ஆதார் எண் வெறும் சம்மதத்தின் பேரில் பெற வேண்டுமேயன்றி, கட்டாயமாக்கி பெறக் கூடாது என்றும் அறிவித்தது.

இந்த நிலையில் ஆதார் அட்டை கட்டாயத்துக்கு எதிரான வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் ஒருவர் சார்பில் மூத்த வக்கீல் சியாம் திவான் ஆஜரானார்.

அவர் தனது வாதத்தின் போது, ‘நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டையை விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமேயன்றி, கட்டயாமாக்கி பெறக்கூடாது’ என்று இந்த கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளை மத்திய அரசு கடைப் பிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்தனர். எனினும் வங்கி கணக்கு தொடங்குதல் போன்ற பிற திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கேட்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.

ஆதார் அட்டை விவகாரத்தில் குடிமக்களின் சுதந்திரம் பறிபோகிறதா? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விசாரிக்க 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்க வேண்டியது அவசியம் என்று கூறிய நீதிபதிகள், இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். 

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank