வெளிர் மஞ்சள்... அடர் மஞ்சள்... வெண்மை... சிறுநீரின் நிறம் உணர்த்தும் உடல்நலம்!

கேட்பதற்கு வேடிக்கையாகத் தோன்றலாம்... `நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது என்ன செய்வீர்கள்?’ சிலர், மோட்டுவளையை அல்லது வேறு எங்காவது பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
வேறு சிலரோ, காதில் மொபைல்போனை வைத்தபடி பேசிக்கொண்டிருப்பார்கள்; இன்னும் சிலர் பல யோசனைகளில் ஆழ்ந்துபோயிருப்பார்கள்; பிறகு..? ஃப்ளஷ் செய்துவிட்டுக் கிளம்பிப் போய்விடுவார்கள். இதில், பெரும்பாலானோர் கவனிக்கத் தவறும் ஒரு விஷயம்... சிறுநீரின் நிறம். இதன் நிறத்தை வைத்துக்கூட நம் ஆரோக்கியத்தின் நிலையை அறிந்துகொள்ள முடியும். இது, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடையாளம். சிறுநீர் வேறு நிறங்களில் இருப்பது, பல்வேறு நோய்கள் இருப்பதற்கான அல்லது ஏற்படுவதற்கான அறிகுறிகள். அவை என்னென்ன?

வெண்மை

சிறுநீர் மிகவும் வெண்மையாக, தெளிவாக இருந்தால், நாம் அதிக அளவில் தண்ணீர் குடிக்கிறோம் என்று அர்த்தம். நம் உடல் செயல்படுவதற்கான அத்தியாவசியத் தேவை தண்ணீர். அதே நேரத்தில், மிக அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் சரி அல்ல. சிறுநீர் வழியாக தேவையற்ற உப்பை வெளியேற்றும் உடலின் செயல்பாட்டை இது சிரமத்துக்கு உள்ளாக்கும். அதிக அளவில் நீர் சேரும்போது, உடலில் தண்ணீர்-சோடியம் சமநிலையின்மை ஏற்படும்.

அதிக அளவு நீரைக் குடிப்பதால், தொடர்ந்து வெண்மையாக சிறுநீர் வெளியேறுவது `ஓவர் ஹைட்ரேஷன்’ (Over hydration)எனப்படும். இந்தப் பிரச்னை இருந்தால் குமட்டல், வாந்தி, தலைவலி, மனக்குழப்பம் போன்ற அறிகுறிகள் தென்படும். உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளாவிட்டால் கோமா வரை செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டு.


அடர் மஞ்சள்
சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், `உடலில் போதிய அளவுக்கு நீர் உள்ளது, நலமாக இருக்கிறோம்’ என்று பொருள். ஆனால், தேனைப் போன்ற அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், போதிய அளவுக்கு நீர் எடுத்துக்கொள்ளவில்லை என்று பொருள். தாகம் எடுக்கும்போதெல்லாம் தண்ணீர் குடிப்பதும், சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைக்காமல் வெளியேற்றுவதுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை சிறுநீர் வழியாகத்தான் வெளியேற்றுகிறோம். அதிக நேரம் அடக்கி வைத்திருந்தால், புதிய நச்சுகள் உடலில் சேர்வதோடு பழைய நச்சுகளையும் வெளியேற்ற முடியாமல் போய்விடும்.

பழுப்பு

சிறுநீர் பழுப்பு நிறத்தில் இருந்தால், அது நீரிழப்பு (Dehydration) பிரச்னை இருப்பதைக் குறிக்கிறது. கல்லீரலில் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறும்.

சிவப்பு

சிறுநீர் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் வெளியேறினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில வேளைகளில் நாம் சாப்பிட்ட உணவும் இதற்குக் காரணமாக இருக்கலாம். பீட்ரூட், கேரட் மாதிரியான உணவுகளை அதிகமாகச் சாப்பிடும்போது சிறுநீர் சிவப்பாக வெளியேறும். ஆனால், இந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிடாத நேரத்திலும் சிறுநீர் சிவப்பாக வெளியேறினால், சிறுநீரில் ரத்தம் இருக்க வாய்ப்பு உண்டு. சிறுநீரில் கல், சிறுநீரகப் பாதைத் தொற்று, சிறுநீரகப் புற்றுநோய் போன்றவை இருந்தால் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறும்.

நீலம் அல்லது பச்சை

தோல் அல்லது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய போர்ஃபைரியா (Porphyria) நோய் இருந்தால், சிறுநீர் நீலம் அல்லது பச்சை நிறத்தில் வெளியேறும். இது பெரும்பாலும் பரம்பரையாக வரக்கூடிய நோய். குழந்தைகளுக்கு பரம்பரையாக வரக்கூடிய ஹைப்பர்கால்சீமியா (Hypercalcaemia) பிரச்னை இருந்தாலும், சிறுநீர் இந்த நிறத்தில் வெளியேறும். ரத்தத்தில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருப்பது `ஹைப்பர்கால்சீமியா’ எனப்படுகிறது.

ஆரஞ்சு

சரியாகத் தண்ணீர் குடிப்பதில்லை என்று அர்த்தம். இது கல்லீரல் மற்றும் பித்த நாள பிரச்னைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். நிறச் சாயங்கள் சேர்க்கப்பட்ட உணவைச் சாப்பிடாலும் இப்படி நிகழும்.
நுரை
சிறுநீர் நுரையாக வெளியேறுவது நமது உணவில் புரதம் அதிகமாக இருப்பதைக் குறிக்கும். சிறுநீரகப் பிரச்னைகளும் இதற்கு காரணமாக அமையும். எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல், மிகச் சாதாரணமாகவும் இப்படி நிகழ வாய்ப்பு உண்டு. ஆனால், இந்தப் பிரச்னை அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதுதான் நல்லது.
சிறுநீர் வெளிர் மஞ்சளைத் தவிர வேறு நிறங்களில் தொடர்ச்சியாக பல நாட்களுக்கு வெளியேறினால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். நோய்கள் குணமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளும் மருந்துகளும் சிறுநீர் நிறம் மாறக் காரணமாக இருக்கலாம். அதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)