உதவி பேராசிரியர் நியமனத்திற்கு மாநில தகுதித்தேர்வு தமிழிலும் நடத்தப்படும் : ஐகோர்ட்டில் தகவல்
உதவி பேராசிரியர் நியமனத்திற்கான மாநில தகுதித்தேர்வு தமிழ் வழியிலும் நடத்தப்படுமென ஐகோர்ட்
கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தலை சேர்ந்த ஏ.சுடலைமுத்து, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எம்காம், பிஎட் முடித்துள்ளேன். பள்ளிக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரையில் தமிழ் வழியில் படித்துள்ளேன். தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்ற மாநில தகுதித்தேர்வில் (செட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை நடத்துவதற்காக கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தை யூஜிசி நியமித்துள்ளது.
ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தேர்வு நடந்தது. இதில் நான் பங்கேற்றேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. தற்போது வெற்றி பெறும் நோக்கில் தொடர்ந்து படித்து வருகிறேன். 2017க்கான தகுதித்தேர்வு ஏப்.23ல் நடக்கும்; இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடக்குமென பல்கலைக்கழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் என்னைப்போல் தமிழ் வழியில் படித்தவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில், 'கடந்தாண்டை ேபால இந்தாண்டும் தமிழ் வழியில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி மனுவை முடித்து வைத்தார்.