ஜனாதிபதி மாளிகையில் அப்துல் கலாம் இப்தார் விருந்து வழங்காதது ஏன்?


         குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாய
ரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை 'கலாம் எபெக்ட்' என்று நாயர் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.


அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் அவருக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வரும். வெளிநாடுகளில் இருந்தும் ஏகப்பட்ட பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கும். அவற்றையெல்லாம் அப்துல் கலாம் போட்டோ எடுத்து வைத்து வகைப்படுத்துவார். பின்னர் அப்படியே அதனை ஆவண காப்பகத்துக்கு அனுப்பி விடுவார். ஒரு பொருளை கூட திரும்பி பார்த்ததது இல்லை. ஒரு பென்சிலை கூட தனக்கு என்று எடுத்து கொண்டது இல்லை. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் அன்பளிப்புகளை மறுத்தால், அந்த நாடுகளை அவமானப்படுத்துவது போல் அமைந்து விடும் என்பதால்தான் பரிசுபொருட்களை அப்துல்கலாம் பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ரமலான் மாதத்தில் குடியரசுத் தலைவர் 'இப்தார்' விருந்தளிப்பது வழக்கமான பாரம்பரியமான நிகழ்வு. கடந்த 2002ஆம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற சமயம். என்னைஅழைத்த அப்துல் கலாம், இப்தார் விருந்துக்கு ராஸ்டிரபதி பவனில் எவ்வளவு செலவாகும்? என்று கேட்டார். நான் 22 லட்ச ரூபாய் செலவழிப்போம் என்றேன். இருக்கப்பட்டவர்களுக்கு இப்தார் விருந்தளிப்பதால் என்ன பயன்? அந்த 22 லட்சத்தை அனாதை இல்லங்களுக்கு பிரித்து வழங்கி விடுவோம். அந்த தொகைக்கு இணையாக அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய சொன்னார். பின்னர் தனியாக என்னை அழைத்து ஒரு லட்ச ரூபாய்க்கும் செக் அளித்து இதையும் சேர்த்து 23 லட்ச ரூபாய்க்கு குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யுங்கள் என அப்துல்கலாம் கூறிய போது, மனித நேயமிக்க மனிதரிடம் பணிபுரிவது குறித்து மிகுந்த பெருமையடைந்தேன். கலாம் இஸ்லாமியர்தான் என்றாலும் அவர் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த வரை குடியரசு தலைவர் மாளிகையில் 'இப்தார்' விருந்து அளிக்கப்பட்டதில்லை.

அப்துல் கலாம் 'யெஸ் சார்' வகை அதிகாரிகளை பக்கத்தில் வைத்து கொண்டதில்லை. ஒரு முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் நின்ற என்னை பார்த்து மிஸ்டர். நாயர் நான் சொல்வது சரியா? என்று வினா எழுப்பினார். அது சரியாக இருக்காது என்றும் அதற்கான காரணங்களையும் நான் அடுக்கி கூறினேன். உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பிரமிப்பு. ராஷ்டிரபதியின் கருத்துக்கு சாதாரண அதிகாரி எதிர் கருத்து சொல்வதும் அதனை அவர் அனுமதிப்பதையும் கண்டு நீதிபதி அசந்தே போனார்.

குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பொறுப்பேற்ற போது ராமேஸ்வரத்தில் இருந்து அவரது உறவினர்கள் 50 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியிருந்தனர். அவர்கள் டெல்லியை சுற்றிபார்க்க ஒரு பஸ் அமர்த்தி தரப்பட்டது. அந்த பேருந்துக்கான கட்டணத்தை அப்துல் கலாம் வழங்கி விட்டார். இவர்களில் யாருக்கும் எந்த சமயத்திலும் அரசுக்கு சொந்தமான கார் பயன்படுத்தப்படவில்லை. கலாமின் உறவினர்கள் டெல்லியில் தங்கியிருந்த சமயத்தில் அவர்களுக்கு உணவு செலவாக 2 லட்ச ரூபாய் குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவிடப்பட்டது. அந்த தொகையை கலாம் தனது கையில் இருந்து செலுத்தி விட்டார். எந்த குடியரசுத் தலைவரும் இது போன்று செலுத்தியதே இல்லை.

அப்துல் கலாமின் 5 ஆண்டு பதவி காலம் முடிய சில நாட்கள் இருந்த சமயத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் ஊழியர்கள் அவரை சந்தித்துக் கொண்டிருந்தனர். அப்போது நானும் அவரை சந்தித்தேன். என்ன மிஸ்டர் . நாயர் உங்கள் மனைவியை காணோம்? என்று கலாம் கேட்டார். எனது மனைவி ஒரு விபத்தில் சிக்கி கால் உடைந்து வீட்டில் இருக்கிறார் என்றேன். அடுத்த நாள் எனது வீட்டை சுற்றி ஒரே போலீஸ். என்னவென்று பார்த்தால் கலாம் எனது மனைவியை பார்க்க வீட்டுக்கே வந்து விட்டார். ஒரு குடியரசுத் தலைவர் சாதாரண ஊழியரின் மனைவியை சந்தித்து பேசுகிறாரே என்று நான் வியந்து போனேன்.

இவ்வாறு முன்னாள் குடியரசுத் தலைவர் பற்றி பி.எம். நாயர் கூறியுள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank