புதிய வினாக்கள் இடம்பெற்றிருந்தாலும் தமிழ் முதல் தாள் எளிதாகவே இருந்தது
புதிய வினாக்கள் இடம்பெற்றிருந்தாலும் தமிழ் முதல் தாள் எளிதாகவே இருந்தது: தேர்வெழுதிய மாணவர்கள் கருத்து
புதிய வினாக்கள் கேட்கப்பட்டிருந்தபோதும் அதிக மதிப்பெண் பெறும் அளவுக்கு பிளஸ் 2 தமிழ் முதல்தாள்
தேர்வு எளிதாக இருந்தது என தேர்வெழுதிய மாணவர்கள் கூறினர். பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தமிழ் முதல் தாள் வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய எஸ்.ஸ்வர்ணமுகி, ஆர்.வித்யஸ்ரீ, எஸ்.ஹரீஷ் உள்ளிட்ட மாணவர்கள் கூறியது:
தமிழ் முதல்தாளில் 2 மதிப்பெண் வினாக்கள், 4 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன.
பகுதி 4-இல் 20 வரிகளில் பதிலளிக்கக்கூடிய 8 மதிப்பெண் வினாக்களில் அறிவுடைமை அதிகாரம், கண்ணகியின் சூளுரை, குழந்தைத் தொழிலாளர் நிலை குறித்து அப்துல் ரகுமான் கூறியது என 3 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கும் மட்டும் பதிலளித்தால் போதும் என்ற நிலையில் மூன்றுமே சுலபமாக இருந்தன.
இருப்பினும் பகுதி 5-இல் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது, அடிகள் நீரே அருளுக என்று வேண்டிக் கொண்டவர் யார்? (38-ஆவது வினா), தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர் யார் (46-ஆவது வினா) ஆகியவை உள்பட மூன்று வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. ஒரு சில வினாக்கள் புதிதாக இடம் பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழ் முதல்தாள் எளிதாகவே இருந்தது என்றனர்.
அதேபோன்று மனப்பாடப் பகுதியில் வாழ்த்துப்பா இடம்பெறும் என்று மாணவர்கள் நினைத்திருந்த நிலையில் கம்பராமாயணம் கேட்கப்பட்டிருந்தது.
தமிழ் முதல் தாளில் கடந்த ஆண்டு சில மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். ஆனால் நிகழாண்டு அதற்கான் வாய்ப்பு சற்றுக் குறைவு. இருப்பினும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.