'இ சேவை' மைய 'சர்வர்' பிரச்னை : ஆதார் அட்டை வழங்குவது நிறுத்தம்
'இசேவை' மையங்களில் தொடரும் 'சர்வர்' பிரச்னையால் ஆதார் அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் அரசு கேபிள் 'டிவி', எல்காட் சார்பில் கலெக்டர், தாலுகா, நகராட்சி,
மாநகராட்சி அலுவலகங்களில் 'இசேவை' மையங்கள் செயல்படுகின்றன. இம்மையங்களில் 30 ரூபாய் கட்டணத்தில் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.
திருத்தம் செய்ய 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கடந்த மாதம் வரை பல மையங்களில் 'பிரின்டர்' இயங்கவில்லை. இதனால் ஆதார் அட்டை பெறுவதில் சிக்கல் இருந்தது. சமீபத்தில் தான் அனைத்து மையங்களிலும் 'பிரின்டர்கள்' சரிசெய்யப்பட்டன.தற்போது 'சர்வர்' பிரச்னையால் ஆதார் அட்டைக்கான இணையதளம் முடங்கியுள்ளது. இதனால் ஆதார்அட்டை வழங்கும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும் சேவை மைய ஊழியர்கள் முறையான காரணம் தெரிவிக்காததால், ஆதார் அட்டை பெறுவதற்காக மக்கள் தினமும் அலைந்து வருகின்றனர்.
சிவகங்கை அரசு கேபிள் 'டிவி' தாசில்தார் காசிவிஸ்வநாதன் கூறுகையில், ' சிலதினங்களாக ஆதார் இணையதளத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஒரு வாரத்திற்கு ஆதார் அட்டை வழங்கப்படாது. அதேபோல் திருத்தமும் செய்ய முடியாது,' என்றார்.