கல்வி கட்டண கமிட்டி புதிய தலைவர் மாசிலாமணி
சென்னை: சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டி தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகளில், கல்விக் கட்டண விகிதங்களை நிர்ணயிக்க, 2009ல், தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்து
தல் சட்டம் இயற்றப்பட்டது.
அதன்படி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, தனியார், நர்சரி, மெட்ரிக் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தது. கமிட்டியின் முதல் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டார். அவருக்கு பின், ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைவரானார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அவர், 2012ல் விலகினார்.
அந்த ஆண்டு ஜனவரியில், ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு, தலைவராக நியமிக்கப்பட்டார். அவர், 2015 டிச., 31ல் ஓய்வு பெற்றார். அதன்பின், தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால், கட்டண கமிட்டியின் பணிகள் முடங்கின. இது குறித்து, தினமலர் நாளிதழில், பல முறை செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில், நேற்று கமிட்டி தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணியை நியமித்து, அரசு உத்தரவிட்டது. இவரது பதவி காலம், மூன்று ஆண்டுகள்.