ஸ்டீவ்ஜாப்ஸ் சொன்ன குட்டிக் கதைகள்!

சித்தார்த்தன் சுந்தரம்


‘ஆப்பிள்’ நிறுவனத்தின் பிதாமகர் ஸ்டீவ் ஜாப்ஸைத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். தனது நிறுவனத்தின் படைப்பான `மெக்கின்டாஷ்’ கணினி மூலம் அதன் படைப்பாற்றல், வடிவமைப்பு, செயல்பாடு குறித்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர். அதன்பின் ஐபோன், ஐபேட் என பல பொருள்களை அறிமுகப்படுத்தி அமோகப் புகழ் பெற்றவர்.

ஸ்டீவ் உயிரோடு இருந்தவரை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியப் பொருள்களையெல்லாம் பார்த்து `ஆ’வென்று வியக்கவைத்ததோடு அதை வாங்குவதற்கு உலகெங்கும் நுகர்வோர்களை, கடைகளின்முன் கால் கடுக்க நிற்க வைத்தப் `பெருமை’யையும் பெற்றவர். 

2005, ஜூனில்  அவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் முன்பு பேசியபோது, தன் வாழ்க்கைச் சம்பவங்களை முன்வைத்து மூன்று குட்டிக் கதைகளைச் சொன்னார். அந்தக் கதைகள்  இதோ... 

நான் ஏன் `ட்ராப்-அவுட்’ஆனேன்?

‘‘நான் பிறப்பதற்கு முன்பே இது ஆரம்பமாகிவிட்டது. திருமணமாகாத கல்லூரி மாணவியான எனது அம்மா, நான் பிறக்கும்முன்பே என்னை தத்துக் கொடுக்கத் தீர்மானித்திருந்தார். அதன்படி, ஒரு வக்கீலும் அவரது மனைவியும் என்னைத் தத்தெடுத்துக் கொள்வதாக முடிவாகி இருந்தது. 

ஆனால், நான் இந்த உலகத்தில் அவதரித்த அந்தத் தருணத்தில் என்னைத் தத்தெடுத்துக் கொள்வதாகக் கூறியிருந்தவர்கள், கடைசி நேரத்தில் அவர்களுக்குப் பெண் குழந்தைதான் வேண்டுமென முடிவை மாற்றி இருந்தனர். எனவே, தத்து எடுப்பதற்காகக் காத்திருப்புப் பட்டியலில் இருந்தவர்களில் ஒரு பெற்றோருக்கு, நடுஇரவில் தொலைபேசி மூலம் `எதிர்பாராமல் ஒரு ஆண் குழந்தை’ பிறந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு, உங்களுக்கு விருப்பமா? எனக் கேட்க, அவர்களும் சம்மதிக்க, நான் அவர்களால் சுவீகாரம் செய்யப்பட்டேன். 

ஆனால், என்னைத் தத்தெடுத்த அம்மா கல்லூரியில் பட்டம் பெறாதவர் என்பதும், அப்பா உயர்நிலைப் பள்ளிப்படிப்பையே முடிக்காதவர் என்பதும் என்னைப் பெற்ற தாய்க்குப் பின்னொரு நாளில் தெரியவந்தது. இதனால் சுவீகாரம் சம்பந்தப்பட்ட இறுதி ஆவணத்தில் கையொப்பமிட என்னைப் பெற்ற தாய் மறுப்பு தெரிவிக்க, என்னை ஏற்றுக் கொண்டவர்கள் என்னைக் கண்டிப்பாக கல்லூரிக்கு அனுப்பிப் படிக்க வைப்பதாக உறுதிகூற, என் சுவீகாரம் சம்பந்தப்பட்ட பிரச்னை முடிவுக்கு வந்தது.

பதினேழு வருடங்களுக்குப் பிறகு நான் கல்லூரிக்குச் சென்றேன். ஸ்டான்ஃபோர்ட் போல, ஒரு கல்லூரியைத் தெரிவு செய்தேன். உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த எனது பெற்றோரின் சேமிப்பு அனைத்தும் எனது கல்லூரிச் செலவுக்கே சரியாக இருந்தது. கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் நான் படிக்கும் படிப்பால் எந்தவித உபயோகமுமில்லை என்பது தெரியவந்தது.

 நான் வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறேன், அதற்கு இந்தப் படிப்பு எப்படி உதவும் என்பது பற்றி எந்த யோசனையும் இல்லை.  ஆனால், பெற்றோர்கள் சம்பாதித்துச் சேமித்து வைத்திருந்த பணத்தை யெல்லாம் நான் செலவு செய்துகொண்டிருப்பதை நினைத்துப் பார்த்துவிட்டு, படிப்பைப் பாதியில் நிறுத்திவிடலாம் என முடிவு செய்தேன். அந்த நேரத்தில் அது பயமூட்டுவதாக இருந்தாலும், நான் சரியாக எடுத்த முடிவுகளில் அதுவும் ஒன்று எனத் தோன்றியது.



நான் கல்லூரியிலிருந்து விலக ஆரம்பித்த நேரத்திலிருந்து எனக்கு சுவாரஸ்யமாகப்பட்ட வகுப்புகளுக்கு மட்டும் செல்ல ஆரம்பித்தேன். இந்த நிகழ்வுகள் ஒன்றும் `ரொமேன்டிக்’காக இருக்கவில்லை. 

எனக்கென்று அறை எதுவுமில்லை. என் நண்பர்களின் அறைகளில் தரையில் படுத்துத் தூங்க நேரிட்டது. சாப்பாடு நேரத்தில் கோக் வாங்குவதற்காக தரப்பட்ட ஐந்து சென்ட் டெபாசிட் பணத்தைத் திரும்பப் பெற்றேன். வாரத்தில் ஒரு நாள், நல்ல உணவு சாப்பிடுவதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், 7 மைல் தொலைவில் உள்ள ஹரே கிருஷ்ணா கோயிலுக்கு நடந்துசென்றிருக்கிறேன். 

நான் கல்லூரியிலிருந்து விலகிய அந்த காலகட்டத்தில் ரீட்  கல்லூரியில்  கையெழுத்துக் கலை (Calligraphy) சம்பந்தமாக ஒரு வகுப்பு நடந்து வந்தது. கல்லூரி முழுவதும் ஒட்டப்பட்டிருந்த ஒவ்வொரு போஸ்டரும் அழகாக எழுதப்பட்டிருந்தது. வழக்கமான வகுப்புகளிலிருந்து ட்ராப்-அவுட் ஆகியிருந்த நான், அந்த வகுப்புக்குச் செல்ல ஆரம்பித்து, புதிய, வித்தியாசமான  `டைப் ஃபேஸ்’களைப் பற்றி கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அந்த நேரத்தில், இதனால் என் வாழ்க்கையில் எந்தப் பயனும் இருக்காது என நினைத்தேன். ஆனால், பத்தாண்டுகள் கழித்து நாங்கள் முதன்முதலாக `மெக்கின்டாஷ்’ கணினியை வடிவமைத்தபோது, நான் கற்றது  கைகொடுத்தது.  அழகான அச்சுக்கலைக் (Typography) கொண்ட முதல் கணினியாக அது திகழ்ந்தது. நான் அந்த கோர்ஸ் படிக்கவில்லை யென்றால் `மேக்’ கணினி ஒருபோதும் பலவகையான டைப்ஃபேஸ்களை கொண்டிருக்காது. `விண்டோஸும்’ அதை `காப்பி’ செய்திருக்கா விட்டால் இன்றைக்கு இருக்கக்கூடிய எந்த ஒரு கணினியிலும் இவை இருந்திருக்காது. 

நீங்கள் முன்னோக்கிப் பார்க்கும்போது புள்ளிகளை ஒன்றிணைக்க முடியாது. ஆனால், கடந்துவந்த காலத்தையும் நிகழ்வுகளையும் பின்னோக்கிப் பார்க்கும்போது அது சாத்தியம். எனவே, இந்தப் புள்ளிகள் அல்லது நிகழ்வுகள் எல்லாம் ஏதோவொரு வகையில் உங்களின் எதிர்காலத்தில் இணையும் என நம்புங்கள். நெஞ்சுரம், விதி, வாழ்க்கை, கர்மா என எதுவாக இருந்தாலும், அதன் மீது நம்பிக்கை வையுங்கள். இந்த அணுகுமுறை என் வாழ்க்கையையே வித்தியாசமாக மாற்றி அமைத்தது.  

 நான் ஒரு அதிர்ஷ்டசாலி  

நான் எதை விரும்பினேனோ, அதைச் செய்வதற்கான வாய்ப்பு எனக்கு 20 வயதாகும் போதே கிடைத்தது. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. வோஷும் (Woz) நானும் சேர்ந்து எளிமையாக `ஆப்பிள்’ நிறுவனத்தை ஆரம்பித்தோம். நாங்கள் மிகவும் கடினமாக உழைத்ததால் அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு பேராக இருந்த நாங்கள் நான்காயிரம் பேராகவும், இரண்டு பில்லியன் டாலர்கள் வருமானம் கொண்ட நிறுவனமாகவும் வளர்ச்சி அடைந்தோம். அந்தக் காலகட்டத்தில்தான் எங்களது ஒப்பற்ற படைப்பான  மெக்்கின்டாஷ் – ஐ சந்தையில் அறிமுகப்படுத்தினோம். அந்த நேரத்தில்தான் நான் நிறுவிய நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவே என்னை வேலை யிலிருந்து நீக்கியது. எனது 30-வது வயதில், நான் நிறுவிய நிறுவனமே என்னை வெளியேற்றியது. 

நான் வெளியேற்றப் பட்டவுடன் சில மாதங்கள் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நான் டேவிட் பாக்கார்டையும், பாப் நோயிஸையும் சந்தித்து மன்னிப்புக் கேட்க முயற்சித்தேன். பொதுவெளியில் நான் தோல்வி அடைந்தவனாகப் பார்க்கப்பட்டேன். சிலிக்கன்வேலியை விட்டே  ஓடிப் போய்விடலாமா என்றுகூட நினைத்தேன். ஆனால், ஏதோவொன்று அதையெல்லாம் செய்ய விடாமல் என்னைத் தடுத்தது. நடந்த நிகழ்வுகள் ஆப்பிளில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. நான் நிராகாரிக்கப்பட்டேன். ஆனால், எனக்குள் இருந்த அன்பு அப்படியே இருந்தது. எனவே, புதிதாக ஒன்றை ஆரம்பிக்கலாம் என நினைத்தேன்.

வெற்றி என்கிற உக்கிரத்தை, ஆரம்பம் என்கிற மென்மை மாற்றி அமைத்தது. நான் இதை அப்போது நினைக்கவில்லை. ஆனால், ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலக்கப்பட்டது அதிக படைப்பாற்றல் கொண்டவனாக என்னை மாற்றியது. 

அடுத்த ஐந்தாண்டுகளில் நான் `NeXT என்கிற நிறுவனத்தையும் `Pixar’ என்கிற நிறுவனத்தையும் ஆரம்பித்தேன். அப்போது அற்புதமான ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டேன். அவளே பின்பு எனது மனைவியும் ஆனாள். `Toy Story’ என்கிற பெயரில், உலகத்திலேயே முதன்முறையாக கம்ப்யூட்டர் அனிமேட்டட் முழு நீளத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது. அதற்கு அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால், ஆப்பிள் நிறுவனமே `NeXT’-ஐயும் வாங்கியது.  நானும் ஆப்பிளுக்குத் திரும்பினேன். NeXT நிறுவனத்தில் நாங்கள் உருவாக்கிய தொழில்நுட்பம்தான் ஆப்பிள் நிறுவனத்தின் இன்றைய மறுமலர்ச்சிக்கான இதயமாக இருக்கிறது. நானும் லாரென்னும் இணைந்ததில் ஒரு அற்புதமான குடும்பம் உருவானது. 

நான் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து நீக்கப்படவில்லை எனில், மேலே சொன்ன எதுவும் நடந்திருக்காது. மருந்து கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், நோயாளி குணம் பெற அது தேவை. சில சமயங்களில் வாழ்க்கை, உங்கள் தலையில் சம்மட்டியால் அடிக்கும். அதற்காக நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். 

நான் எதைச் செய்தேனோ, அதை நேசித்தேன்; அதுதான் என்னை முன்னோக்கி இட்டுச் சென்றது. நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டறியுங்கள். உங்கள் காதலரைப் போல, உங்கள் வேலையிலும் அதுவே உண்மையாகும். 

உங்கள் வாழ்க்கையில் பெரும்பகுதியை உங்கள் வேலை எடுத்துக்கொள்ளும். எனவே, அதில் முழு திருப்தி அடைவதற்கு நீங்கள் உங்கள் வேலையை நேசியுங்கள். அப்படி எதுவும் உங்களுக்கு  இதுவரை அமையவில்லை என்றால் தொடர்ந்து தேடிக் கொண்டே இருங்கள். அதுவரை `செட்டில்’ ஆகாதீர்கள். நீங்கள் எப்போது அதைக் கண்டடைவீர்்கள் என்பதை உங்கள் இதயம் காட்டிக் கொடுக்கும். 

எந்தவொரு உறவுமுறையும் ஆண்டுகள் செல்லச் செல்ல சிறப்பாக அமையும். எனவே, நீங்கள் தேடுவது கிடைக்கும் வரை ஓய்ந்துவிடாதீர்கள்.  தேடிக்கொண்டேயிருங்கள். 



மரணத்தை அருகில் பார்த்தபோது... 

எனக்கு 17 வயதாக இருக்கும்போது, `நீ வாழும் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளென்று நினைத்து வாழ்ந்தால், ஒருநாள் கண்டிப்பாக அது சரியாக இருக்கும்’ என்கிற ஒரு மேற்கோளைப் படித்தேன். அந்த நாளிலிருந்து இன்றுவரை, அதாவது கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக ஒவ்வொரு நாள் காலையிலும் என்னை நான் கண்ணாடியில் பார்க்கும்போது, `என் வாழ்க்கையில் இன்று கடைசி நாளாக இருந்தால் நான் என்னென்ன செய்யவேண்டுமோ, அதை இன்றே செய்ய வேண்டுமா?” எனக் கேட்டுக்கொள்வேன். அதற்கான விடை `இல்லை’ எனத் தொடர்ந்து மனதுக்குள் எழுந்தால், எதிலாவது மாற்றம் அவசியம் என்பதைத் தெரிந்துகொள்வேன்.

 வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புகள், கெளரவம், அசெளகரியங்களை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் குறித்த பயம் அல்லது தோல்விகளெல்லாம் மரணம் என்கிற ஒன்றை எதிர்கொள்ள நேரும்போது தவிடுபொடியாகிவிடும். நீங்கள் எதையோ இழக்கப் போகிறீர்கள் என்கிற சிந்தனையைத்  தவிர்ப்பதற்கு, ஒருநாள் நீங்கள் மரணிக்கப் போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்வதே சிறந்த வழி. 

ஒரு வருடத்துக்குமுன் காலை 7.30 மணிக்கு எனது கணையத்தில் புற்றுநோய் இருப்பதாக மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. எனக்கு கணையம் என்றாலே என்னவென்று தெரியாது. அது குணப்படுத்தப்பட முடியாத புற்றுநோய் என்றும், மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரைதான் நான் உயிரோடு இருக்கமுடியும் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள். வீட்டுக்குச் சென்று ஆகவேண்டியதைப் பார்க்குமாறு  சொன்னார்கள் (அதாவது, மரணத்தை எதிர்நோக்கிக் காத்திரு என்கிற பொருளில்). ‘அடுத்த பத்து ஆண்டுகளில் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியதை ஒரு சில மாதங்களிலேயே சொல்லிவிடு’ என்கிற ஒரு கட்டாயமான சூழ்நிலை. 

நான் அன்று முழுவதும் அந்த சிந்தனையிலேயே இருந்தேன். அன்றைக்கு மாலையில் எண்டோஸ்கோபி செய்து, கணையத்தில் இருந்த கட்டியில் இருந்து சில செல்களை எடுத்து பரிசோதித்ததில், அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றிவிடலாம் எனத் தெரியவந்தது. எனக்கும் அறுவை சிகிச்சை நடந்தது. இப்போது நலமாக இருக்கிறேன்.

இதுதான் நான் மரணத்தை மிக அருகில் பார்த்தது. யாரும் மரணிக்க விரும்புவதில்லை. சொர்க்கத்துக்குச் செல்லவேண்டும் என நினைப்பவர்கள் கூட இறக்க விரும்புவதில்லை. இருந்தாலும், மரணம் என்கிற இலக்கை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம். யாரும் அதிலிருந்து தப்பிக்க முடியாது. மரணம் என்பது வாழ்க்கையின் மிகச் சிறந்த ஒரு கண்டுபிடிப்பு. அது ஒரு வாழ்க்கை மாற்று காரணியாகும். பழையதைக் கழித்து புதியவற்றுக்கு  வழி விடக்கூடியது. இப்போது நீங்கள் புதியவர்கள். ஆனால், ஒரு நாள் நீங்கள் பழையதாகி, புதியதற்கு வழிவிட வேண்டும். இதைச் சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். ஆனால், இதுதான் உண்மை. 

உங்களுக்கான நேரம் வரையறுக்கப் பட்டது. எனவே, இன்னொருவரின் வாழ்க்கை போல வாழ்வதில் அதை விரயம் செய்யாதீர்கள். அடுத்தவர் என்ன நினைப்பார் என்பதற்காக வாழாதீர்கள்.  உங்களுக்குள் எழக்கூடிய குரல் அடுத்தவர்கள் போடும் இரைச்சலில் தேய்ந்துபோக விடாதீர்கள். உங்கள் மனம், உள்ளுணர்வு சொல்வதை தைரியமாகப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.  நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று அவற்றுக்குத்  தெரியும். மற்றதெல்லாம் இரண்டாம்பட்சமே. 

நான் இளைஞனாக இருக்கும்போது `The Whole Earth Catalogue’ என்கிற அற்புதமான ஒரு வெளியீடு வந்துகொண்டிருந்தது.  அது, எனது தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு பைபிள் போன்றது. மென்லோ பார்க்கைச் சேர்ந்த ஸ்டீவர்ட் ப்ராண்டால் அது வெளியிடப்பட்டது. அவருடைய கவித் தன்மையை வாழ்க்கைக்குள் கொண்டு வந்தார். இது பர்சனல் கம்ப்யூட்டர், டெஸ்க்டாப் பப்ளிஷிங் எல்லாம் வருவதற்கு முந்தைய காலகட்டமான 1960-களில் வெளியானது. 

ஸ்டீவர்ட்டும் அவரது குழுவினரும் `The Whole Earth Catalogue’-ன் பல இதழ்களைக் கொண்டுவந்தனர். இந்த வெளியீட்டின் கடைசி இதழ் 1970-களில், நான் உங்களைப் போல் இருக்கும்போது வெளியானது. அந்த பத்திரிகையின் கடைசி இதழின் பின் அட்டையில், அதிகாலை நேரத்து சாலை ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்கள். அதன் கீழ் `பசியோடு இருங்கள்; முட்டாளாக இருங்கள் (Stay Hungry;Stay Foolish)’ என்கிற அவர்களுடைய பிரியாவிடை செய்தி இருந்தது. அதாவது, அறிவுப்பசியோடு உயர்வை நாடுபவர்களாக இருங்கள் என்பதுதான் அதன் உட்பொருள். 

நான் அப்படியிருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். இப்போது பட்டதாரிகளாகி, புதிய வாழ்க்கையைத் தொடங்கவிருக்கும் நீங்களும் அப்படியிருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அனைவருக்கும் மிகவும் நன்றி!’’

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)