கூடுதல் விடைத்தாள்களுக்கு தட்டுப்பாடு : தேர்வறையில் சும்மா இருந்த மாணவியர்
பத்தாம் வகுப்பு தேர்வில், கூடுதல் விடைத்தாள் கிடைக்காமல் தேர்வறையில், 'சும்மா' இருந்த மாணவர்கள், கூடுதல் மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 8ல் துவங்கியது. தமிழ் முதல் தாள் முடிந்து, நேற்று, இரண்டாம் தாளுக்கு தேர்வு நடந்தது. வினாத்தாள் எளிமையாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பதில் எழுதினர்.
சிவகங்கையில், தனியார் பள்ளி தேர்வு மையத்தில், மாணவியருக்கு கூடுதல் விடைத்தாள்கள் வழங்க, தேர்வு மைய பொறுப்பாளர்கள், ஒவ்வொரு மையமாக அலைந்தனர்; அங்கும் விடைத்தாள்கள் தட்டுப்பாடு இருப்பது தெரிய வந்தது. அரை மணி நேர தேடலில், பக்கத்து கிராம பள்ளியில் இருந்து, கூடுதல் விடைத்தாள்களை வாங்கி வந்தனர். அதற்குள் தேர்வு நேரம் முடிந்ததால், கூடுதல் விடைத்தாள்கள் கேட்ட மாணவியர் தேர்வை எழுத முடியவில்லை.
இதேபோன்று, சென் னை, மதுரை, நாமக்கல், திருநெல்வேலி, சிவகங்கை, கோவை உட்பட, பல மாவட்டங்களிலும், புதுவையில், காரைக்கால் மாவட்டத்திலும், கூடுதல் விடைத்தாள்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இத்தகைய மாணவர்கள், தங்களுக்கு கூடுதல் மார்க் கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இது குறித்து, தேர்வறை கண்காணிப்பாளர்கள் கூறியதாவது: விடைத்தாள்களை வீணாக்கக்கூடாது எனக்கூறி, மாவட்ட தேர்வு மைய அதிகாரிகள், சொற்ப எண்ணிக்கையில், கூடுதல் விடைத்தாள்கள் தருகின்றனர். அதனால், மாணவர்களிடம், 'கொஞ்சமாக எழுதுங்கள், பேப்பர் இல்லை' என, கெஞ்ச வேண்டிய நிலை உள்ளது. 'காகிதத்தை மிச்சப்படுத்துகிறேன்' என, மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடுவதை, தேர்வுத்துறை கைவிட வேண்டும். இதுபோன்ற மாணவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் குறித்து, தேர்வுத்துறை தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
10ம் வகுப்பு தமிழ் தேர்வில் 35 பேர் சிக்கினர் : பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வுகளில், 35 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு பிடிபட்டுள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, நேற்று முன்தினம் துவங்கியது. தமிழ் முதல் தாள் தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்தது. ஆனாலும், இந்த தேர்வில், 23 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கினர். நேற்று நடந்த இரண்டாம் தாள் தேர்வில், 12 பேர் பிடிபட்டதாக, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.